கிரித்தி: இது புதிய தொடக்கம்

3 mins read
dff149c4-1b3f-4a9a-aadb-81b7ded46854
கிரித்தி சனோன். - படம்: ஊடகம்

தேசிய விருது பெற்றதன் மூலம் தனது வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இளம் நாயகி கிரித்தி சனோன்.

தனது திறமையை அங்கீகரிக்கும் விதமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மிமி’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்புக்காக கிரித்தி சனோனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்தித் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நடிகை கிரித்தி சனோன். இவர் டெல்லியில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரி.

“எல்லாரையும்போல் படிப்பை முடித்த பின்னர் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற சராசரி மனப்போக்குடன்தான் செயல்பட்டேன். எனினும் மாடலிங் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. அங்கு பெற்ற அனுபவம்தான் திரைத்துறையில் நுழைவதற்கான துணிச்சலைக் கொடுத்தது,” என்கிறார் கிரித்தி சனோன்.

திரையுலகில் இவரது வளர்ச்சி ஒரே இரவில் ஏற்படவில்லை. படிப்படியாக வெற்றிகளைப் பெற்று இன்று தேசிய விருது பெறும் அளவுக்கு உயரம் கண்டுள்ளார்.

இன்று இந்தித் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தாலும் கிரித்தியை அறிமுகப்படுத்தியது என்னவோ தெலுங்குத் திரையுலகம்தான். ‘நெனோக்கடைன்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம்தான் திரையுலகில் கால்பதித்தார்.

அதன்பின்னர் ‘ஹவுஸ்புல் 4’, ‘தில்வாலே’, ‘கணபத் 1’, ‘மிமி’, ‘ஷெஹ்சாதா’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். இளையர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இளம் நாயகிகளின் பட்டியலில் கிரித்திக்கும் இடம் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கிய ‘ஆதிபுருஷ்’ படத்திலும் இவர்தான் கதாநாயகி. எப்போதுமே அமைதியான புன்னகையை வெளிப்படுத்தும் கிரித்திக்கு சர்ச்சைகள் என்றால் அறவே ஒத்துக்கொள்ளாதாம். ஏதேனும் சர்ச்சை குறித்து கருத்து கேட்டால், “ஆளை விடுங்க” என்று ஏதும் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறார்.

இந்நிலையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இவரும் ஆலியா பட்டும் கூட்டாகப் பெற்றுள்ளனர்.

“எனக்கும் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ‘மிமி’ படத்தில் பணியாற்றியவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட உடன் எனது நலனில் அக்கறை உள்ள பலர் உடனடியாகத் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தனர்.

“அப்போது எனக்குள் ஏற்பட்ட உணர்வை எப்போதும் மறக்கமாட்டேன். அது மிகவும் பரவசமான அற்புதமான தருணம்.

“இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் என நம்புகிறேன். ‘மிமி’ திரைப்படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் எப்போதும் ஆகச்சிறந்த இடத்தை பெற்றிருக்கும்,” என்கிறார் கிரித்தி சனோன்.

ரசிகர்கள் தன்னிடம் காட்டி வரும் அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கிரித்தி, ரசிகர்களின் ஆதரவு இல்லை என்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது என்கிறார்.

விருது அறிவிக்கப்பட்டவுடன் ஆலியா பட்டை தொடர்புகொண்டு பேசியுள்ளார் கிரித்தி. தாம் ஆலியாவின் தீவிர ரசிகை என்கிறார்.

“ஆலியாவைப் பொறுத்தவரை தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர். அவரது நடிப்பை மிகவும் ரசிப்பேன்.

“எங்களுக்கு விருது பெற்றுத் தந்துள்ள படத்தில் இருவருமே தனி நாயகியாக எங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம். ஆலியாவுடன் சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் கிரித்தி சனோன்.

33 வயதான இவர், அடுத்து கனமான, அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்க விரும்புகிறாராம். அதே சமயம், வணிக அம்சங்கள் கொண்ட திரைப்படங்களிலும் நடிப்பாராம்.

“எனக்கு விருது கிடைத்துள்ளது என்பதை இன்னும்கூட நம்ப முடியவில்லை. இந்த விருது என் கண்களைக் குளமாக்கிவிட்டது. இதற்கு முன்பு வேறு எந்தவொரு தருணத்திலும் நான் கண்கலங்கியதாக நினைவில்லை,” என்கிறார் கிரித்தி சனோன்.

குறிப்புச் சொற்கள்