திரையுலகில் நிலைத்திருக்க தாம் பல்வேறு சவால்களைக் கடந்துவர வேண்டியிருந்ததாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.
ஒருசிலரை நம்பி நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டதால் தாம் பிரச்சினைகளில் சிக்க நேரிட்டதாக ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பி்ட்டார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘துடிக்கும் கரங்கள்’. அதே தலைப்பில் தற்போது உருவாகியுள்ள படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். வேலுதாஸ் இயக்கியுள்ளார்.
கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் திரை காணும் நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் விமல்.
“ஏன் உங்களுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாவதில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. கடவுள் புண்ணியத்தில் இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இனி எனது படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்,” என்றார் விமல்.
திரையுலகில் அறிமுகமான புதிதில் எல்லாரையும் நம்பியதாகவும் ஒருசிலரை அதிகமாக நம்பி பல ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நம் படம்தானே என்று நினைத்து ஒருசிலர் சொன்ன இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டுவிட்டேன். அதற்கெல்லாம் பின்னாள்களில் மொத்தமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசித்து தயங்கும் அளவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பல சம்பவங்கள் நடந்துவிட்டன,” என்று விமல் தெரிவித்தார்.
இப்போது தேவையின்றி எதிலும் கையெழுத்திடுவதில்லை என்றும் இனிமேல் தமக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
“மூன்று ஆண்டுகளில் எனக்குக் கிடைத்துள்ள அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. பல்வேறு சிக்கல்களை, சவால்களை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன். அவ்வேளையில் என்னை நம்பி வந்த படம்தான் இந்த ‘துடிக்கும் கரங்கள்’. சொல்லப்போனால் கொரோனா ஊரடங்கு வேளையில் எனக்கு இந்தப் படம்தான் கைகொடுத்தது.
“இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால்தான் எனக்கு ‘விலங்கு’ உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன. எனவே இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் முக்கியமான படைப்பு,” என்றார் விமல்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக விமல் வலம் வந்த காலமும் இருந்தது. எனினும் கால்ஷீட் பிரச்சினை, சம்பளத்தைத் திடீரென உயர்த்தியது உள்ளி்ட்ட பல்வேறு புகார்களில் சிக்கினார்.
தனது படத்துக்கான விளம்பர நிகழ்வுகளில்கூட அவர் பங்கேற்பதில்லை என்றும் ஒருவேளை நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஒப்புக்குச் சில வார்த்தைகள்ஃ பேசிவிட்டுச் செல்கிறார் என்றும் கூறப்பட்டது.
மேலும், மதுப்பழக்கத்துக்கு ஆளானதால் பல வாய்ப்புகளை இழந்ததாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்தும் விமல் பேசினார்.
“நடிகர் ரோபோ சங்கரைப் பார்த்துப் பலரும் திருந்திவிட்டார்கள். எல்லாரும் உடல்நலத்தில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர்.
“நானும்கூட மதுப்பழக்கத்துக்கு ஆளாகி இருந்தேன். அதனால் பல சிக்கல்கள் உருவாகின. ஆனால் ரோபோ சங்கருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு எல்லாரையும் யோசிக்க வைத்துள்ளது.
“அந்த வகையில் நானும் மது அருந்தி 45 நாள்களாகிவிட்டன. நான் திருந்தி விட்டேன்,” என்று விமல் தெரிவித்திருக்கிறார்.