கதை சொன்ன இயக்குநர்; ஆடிப்போன வடிவேலு

2 mins read
d739d2b0-932d-48b6-b436-33834e2c62ad
‘சந்திரமுகி 2’ படத்தில் லாரன்ஸ், கங்கனா. - படம்: ஊடகம்

ரசிகர்களைப் பார்க்கும்போது தன் மனதில் இருக்கும் வேதனைகளும் கஷ்டங்களும் பஞ்சாய்ப் பறந்து போகும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரசிகர்கள் இல்லை என்றால் கலைஞர்கள் இல்லை என்றார்.

‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் பி வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரணாவத் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

“ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்தான் எங்களது மகிழ்ச்சி உள்ளது. அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ மிகப்பெரிய வெற்றிப் படம். அதைவிட பெரிய வெற்றிப் படம் ‘சந்திரமுகி 2’ என்பேன்.

“இரு படங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரு படங்களிலும் இருவேறு வடிவேலுவைப் பார்ப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை வெளியே வெளிவர முடியாமல் கதவுக்குப் பூட்டு போட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.

“உனக்கு சினிமாவில் நடிப்பதற்கான தகுதியே இல்லை என்றனர். அதற்கு என்ன காரணம் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவியைக் கொடுத்து என் வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவர் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.

“’சந்திரமுகி’ முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடுபடுகிறார் என்பதைப் படத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும்,” என்றார் வடிவேலு.

‘சந்திரமுகி 2’ படத்துக்கான கதையை இயக்குநர் பி.வாசு விவரித்தபோது தாம் அசந்து போனதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றார்.

“பொதுவாக இயக்குநர் பி.வாசு யாரிடமும் விரிவாக கதை சொல்ல மாட்டார். ஒருவரியில் மட்டும்தான் சொல்வார். ஆனால் என்னைத் தங்கு விடுதிக்கு வரவழைத்து சுமார் மூன்று மணி நேரம் இக்கதையை விவரித்தார். அந்தக் கதையைக் கேட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விஷயங்களை வெற்றி விழாவில் சொல்வேன்,” என்றார் வடிவேலு.

குறிப்புச் சொற்கள்