பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார்.
சென்னையிலும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலும் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இதுவரை தாம் நடித்திராத மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படம் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் சந்தானம்.
இளம் காதல் ஜோடிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்டிருக்கும் இப்படம், இளையர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவரும் என்கிறார்.
“இதற்கு முன்பு வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்கும் இந்தப் புதிய படத்துக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன. அது திகில் நிறைந்த நகைச்சுவைப் படம். ‘கிக்’ முற்றிலும் வேறு மாதிரியான படம்.
“இது சந்தானம் படம் என்று சொல்வதைவிட இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்க அவரது பாணியில் உருவாக்கி உள்ளார்,” என்கிறார் சந்தானம்.
படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரசியங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி தான்யா ஹோப் ஒரு குதிரையில் ஏறிச் செல்வது போன்று படமாக்கினர். தான்யாவுக்கு குதிரையேற்றம் நன்றாகத் தெரியும். ஆனால் படப்பிடிப்புக்கு வந்த குதிரைக்கு தாய்லாந்து மொழியில் பேசினால்தான் புரியும்.
“அதனால் தான்யா ஏறினால் தள்ளிவிட்டுச் சென்றுவிடும். பிறகு அந்தக் காட்சியை நீக்கிவிட்டோம். இப்போது நினைத்தாலும் அந்தச் சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது,” என்று சொல்லி சிரிக்கிறார் சந்தானம்.
இவர் புதுவையில் தங்கியிருந்தபோது தயாரிப்பாளர் நவீன் ராஜும் இயக்குநர் பிரசாந்த்ராஜும் நேரில் வந்து கதை சொன்னார்களாம். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் தமக்குப் ரொம்பவே பிடிக்கும் என்கிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
“இனி எனது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். திரையரங்குக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் இரண்டு மணி நேரம் கவலையை மறந்து சிரிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
“இந்த ‘கிக்’ படம் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உருவாகி உள்ளது,” என்கிறார் சந்தானம்.

