‘திட்டுகள்தான் செதுக்கின’

‘திட்டுகள்தான் செதுக்கின’

2 mins read
997b6d0e-ee32-4ad0-88f7-98beaee57fa4
சசிகுமார். - படம்: ஊடகம்

உதவி இயக்குநராக இருந்தபோது வாங்கிய திட்டுகள்தான் தம்மை செதுக்கியதாகக் கூறியுள்ளார் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.

‘குற்றப் பரம்பரை’ படத்தை இயக்கப் போவது உறுதி என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் படத்துக்கான கதையைத்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லா ஏற்பாடுகளும் விரைவில் தயாராகிவிடும். நல்ல நேரத்தில் அறிவிப்பு வரும். அநேகமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்புத் தொடங்கிவிடும்.

“இயக்குநர்கள் பாலா, அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது நிறைய திட்டு வாங்கியது நானாகத்தான் இருக்கும். ஆனால் அந்தத் திட்டுகூட, செல்லமாகத்தான் இருக்கும். ஏதாவது தவறு நடந்துவிட்டால் போதும், ‘டேய் சசி... சசி...’ என்றுதான் குரல் கேட்கும். அந்த அதட்டல் குரலில் உரிமையும் இருக்கும்.

“ஒருமுறை கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு நடிகர் என்னிடம் வந்து நீங்களும் இயக்குநராகி விடுவீர்கள் என்றார். ஏன் திடீரென இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இயக்குநருக்கு எந்த உதவி இயக்குநர் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அந்தப் பெயர்தான் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் உங்கள் பெயர்தான் அடிக்கடி கேட்கிறது,” என்றார்.

“திட்டு வாங்குவதில்கூட நல்ல விஷயம் இருக்கிறதே என மனதில் தோன்றியது. அவர்கள் இருவரது திட்டுகள்தான் என்னைச் செதுக்கின. அந்த நடிகர் சொன் னதுதான் இன்று நிறைவேறி உள்ளது,” என்று சொன்ன சசிகுமார், தாடிதான் தனது முக்கிய அடையாளமாக மாறிவிட்டது என்றார்.

தாடியுடன் இருப்பது ஒருவித முதிர்ச்சியான தோற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டவர், கதைக்குத் தேவைப்படும் பட்சத்தில் தாடியை எடுக்க தாம் தயாராக உள்ளதாக கூறினார்.

தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘நா நா’, ‘நந்தன்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளாராம். அவற்றுக்கான படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டதால் ‘குற்றப் பரம்பரை’ படத்தை இயக்குவதற்கான பணிகளில் மூழ்கியுள்ளார்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘சுப்ரமணியபுரம்’ படம் மறுவெளியீடு கண்டுள்ளது. திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முக்கிய காட்சிகளின்போது ஆரவாரத்துடன் கைதட்டி, பாராட்டிக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது சிலிர்த்துப் போவதாகச் சொன்னார்.

“தமிழ்த் திரையுலகம் இப்போது நன்றாக உள்ளது. கொரோனா முடக்க நிலைக்குப் பிறகு நல்ல படங்கள் வெளியாகின்றன. மேலும், அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாராவதும் நம்பிக்கையூட்டுகிறது.

“குறைந்த செலவில் உருவாகும் படங்கள் வெற்றி பெறுவதும் நல்ல விஷயம். மொத்தத்தில், திரைத்துறை மக்களிடம்தான் உள்ளது. ரசிகர்கள் நினைத்தால்தான் இந்தத் துறை செழிக்கும்.

“ஏனெனில் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கின்றனர்,” என்று சொல்லும் சசிகுமாருக்கு, மனோரமாவும் கோவை சரளாவும்தான் பிடித்த நடிகை களாம்.

நகைச்சுவை நடிப்பில் சிறப்பாகப் பங்களிப்பவர்களைத்தான் தமக்குப் பிடிக்கும் என்றும் கதாநாயகிகளில் ஊர்வசியும் லைலாவும் மட்டுமே நகைச்சுவைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கக் கூடியவர்கள் என்றும் குறிப்பிட்டார் சசிகுமார்.

குறிப்புச் சொற்கள்