செம்மரக் கடத்தலின் பின்னணியை விவரிக்கும் திரைப்படம்

செம்மரக் கடத்தலின் பின்னணியை விவரிக்கும் திரைப்படம்

2 mins read
065ea01b-5534-4071-a4fe-56c5141974ab
‘ரெட் சேண்டல்’ படத்தில் வெற்றி, தியா மயூரிக்கா. - படம்: ஊடகம்

ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘ரெட் சேண்டல்’ திரைப்படம். இதில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளைக் கடத்திய இருபது தமிழர்கள் ஆந்திர அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘ரெட் சேண்டல்’ படத்தை இயக்கி உள்ளார் குரு ராமானுஜம். தியா மயூரிக்கா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், மாரிமுத்து, மெட்ராஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

கதைப்படி கதாநாயகன் வெற்றி, தனது காதலியின் அண்ணனைத் தேடி ரேணிகுண்டா பகுதிக்குச் செல்கிறார். ஆனால் செம்மரம் கடத்த வந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு வனத்துறையினர் அவரைக் கைது செய்கின்றனர்.

“தன்னைப் போன்று மேலும் சில தமிழர்கள் கைதாகி உள்ளதை அறிகிறார் வெற்றி. உண்மையில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் இருப்பது யார், தமிழர்கள் ஏன் கைது செய்யப் படுகிறார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைப் படத்தில் அலசியுள்ளோம்.

“சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய குற்றத்தில் ஈடுபட்டவர்களைச் சுட்டுக்கொன்றது ஏன் என்பதே முக்கியமான கேள்வி. இதையெல்லாம் உண்மைக்கும் மனத்திற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை,” என்கிறார் இயக்குநர் குரு ராமானுஜம்.

இளையர்கள் இதுபோன்ற படைப்புகளைப் பார்க்க வேண்டும் என்று படக்குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதன் மூலம் சமூகத்தில் நிகழும் அநீதிகள், பாரபட்சமான போக்கு ஆகியவை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். ‘ரெட் சேண்டல்’ எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்