விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட தகவல்தான். சற்றே தாமதமானாலும் விஜய் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது.
இவர் இயக்கும் படத்தை முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா தயாரிக்கிறது. இதற்காக ஒப்பந்தத்தில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
தனது தாத்தா எஸ்.ஏ.சந்திர சேகரைப் போல் இயக்குநராக உருவாக வேண்டும் என்பதுதான் ஜேசன் சஞ்சயின் கனவு. தந்தையைப் போல் அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை.
அவர் சில குறும்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற பின்னர் திரைப்படத்தை இயக்குகிறார். அவர் விஜய் சேதுபதியை வைத்து முதல் படத்தை உருவாக்க இருப்பதாகத் தெரிகிறது.
அண்மையில் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார் ஜேசன் சஞ்சய். இந்தக் குறும்படம் ‘யூடியூப்’ தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.