இளம் நாயகி கௌரி கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘அடியே’. ஜி.வி.பிரகாஷுடன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் கௌரியின் கதாபாத்திரத்துக்கு ‘செந்தாழினி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். படக்குழுவினர் எதிர்பார்க்காத வகையில் இந்தப் பெயருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
“இனி நான் ஏராளமான படங்களில் நடித்தாலும்கூட ‘96’ படத்தில் ஏற்று நடித்த ஜானு கதாபாத்திரத்தை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். என் வாழ் நாளில் அதுபோன்ற அருமையான கதாபாத்திரம் இன்னொரு முறை அமையுமா என்பது தெரியாது. இப்போதும்கூட எங்கு சென்றாலும் என்னை ஜானு என்றுதான் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“செந்தாழினி என்ற பெயர் ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்தமான பெயர். ‘அடியே’ படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு முதலில் யாழினி என்றுதான் பெயர் சூட்டியிருந்தனர். பின்னர் கண்மணி, சைந்தவி உள்ளிட்ட பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
“அப்போது ஜி.வி.பிரகாஷ்தான், ஏற் கெனவே நன்கு அறியப்பட்ட பெயர்கள் வேண்டாம் என்றார். ஏதாவது மாறுபட்ட தமிழ்ப் பெயரைச் சூட்டுமாறு கூறினார். அப்படித்தான் இந்தப் பெயர் அமைந்தது.
“இன்று ரசிகர்கள் அதிகம் முணுமுணுக்கும் பெயராக இது மாறியதற்காக அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் கௌரி கிஷன்.
‘அடியே’ படத்தின் தலைப்புக்கேற்ப நாயகனைவிட கௌரிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ஜி.வி.பிரகாஷும் தயக்கமின்றி ஒத்துழைத்துள்ளார்.
“குழப்பம் இல்லாத கதைகளைக் கேட்கும் போதே அதில் உள்ள கதாபாத்திரங்களைப் புரிந்துகொண்டு நடிப்பது சவாலானது. எனினும் எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை இயக்குநரிடம் தெரிவித்தபோது, அவர் கூறிய விளக்கங்கள் கச்சிதமாக இருந்தன. அதன் பிறகுதான் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடிந்தது,” என்கிறார் கௌரி.
தொடர்புடைய செய்திகள்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நாயகன், நாயகி இடையே காதல் மலர்கிறது. பெரிய பாடகியாக வேண்டும் என்ற நாயகியின் கனவு நனவாக நாயகன் மறைமுகமாக உதவுகிறார்.
ஆனால், நாயகி பெரிய பாடகியானதும், அதற்கு தாமே காரணம் என்று சொல்லி, நாயகனின் நண்பன் ஏமாற்றுகிறார்.
“ஜிவியை நான் ஒருதலையாகக் காதலிப்பேன். அது அவருக்குத் தெரியாது. நண்பர் கூறியதை நம்பி அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதிப்பேன். அதன் பிறகு திருமணம் நடந்ததா இல்லையா, காதலர்கள் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை,” என்று சொல்லும் கௌரிக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்ததால் தமிழில் சரளமாகப் பேசுகிறார்.
சிறந்த செய்தியாளராக வேண்டும் என்பது தான் இவரது இளம் வயதுக் கனவாம். திரைப்பட நடிகையாகி, இந்த அளவுக்குப் புகழ் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்கிறார்.
“பெங்களூரில் உள்ள கல்லூரியில் ஊடகத்துறை, மனோ தத்துவம், ஆங்கில இலக்கியம் ஆகிய மூன்று முக்கியமான பாடங்களுடன் கூடிய பட்டப்படிப்பை மேற்கொண்டேன். எனினும் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோதே திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.
“இப்போதும் ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளது. சமூகப் பிரச்சினைகள் குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செய்திக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
“நடிகையாகிவிட்டாலும் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் மூலம் சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதற்கு வாய்ப்புகள் அமைந்தால் மகிழ்வேன். அதன் மூலம் எனக்குள் இருக்கும் செய்தியாளரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என நம்புகிறேன்.
“தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார் கௌரி கிஷன்.
இவர் தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

