நடிகர் சிம்புவுக்கு புது சிக்கல்

நடிகர் சிம்புவுக்கு புது சிக்கல்

2 mins read
7131a40e-4405-4b84-8cc0-db3a6570a4c9
ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். - படம்: சமூக ஊடகம்

‘மாநாடு’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிய சிம்பு, தற்போது தரமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தொடர்ச்சியாக மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்ததை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய செலவில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார் சிம்பு. 

இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்தப்படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு இருந்தார் சிம்பு.

அதன்படி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு. 

ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இதனிடையில் தான் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இதையடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு தங்கள் படம் நடிக்காமல் வேறு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கக்கூடாது என தெரிவித்தது. 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு ஒன்று தொடுத்தது.

அதில், கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து ரூ. 4.50 கோடி கொடுத்த நிலையில் சிம்பு அந்தப்படத்தை முடித்துக்கொடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி வேல்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூபாய். 1 கோடிக்கான உத்திரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனையடுத்து ‘எஸ்டிஆர் 48’ படம் எப்போது துவங்கும் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். 

இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். 

இவரின் இரண்டாவது படைப்பாக உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்