தாம் ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகக் கூறிய நடிகை ஊர்வசி ரௌடலாவை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அண்மைய பேட்டி ஒன்றில், ‘ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னணி இந்திய நடிகையாக எவ்வாறு உயர்ந்தீர்கள்?’ என்று செய்தியாளர் ஒருவர் ஊர்வசியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “அனைத்து நடிக, நடிகையரும் இந்த வளர்ச்சியைக் காண ஆசைப்படுவர். இப்படிப்பட்ட நாள் வர வேண்டும் எனவும் விரும்புவர்,” என்று பதில் அளித்திருந்தார் ஊர்வசி.
அவரது இந்தப் பதில்தான் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி என்றால் ஒருமணி நேரத்துக்கு ரூ.60 கோடி ஊதியம் பெறுகிறீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது எப்படி சாத்தியமாகும் என்றும் பொய் சொல்வதற்கு அளவில்லையா என்றும் சமூக ஊடகங்களில் கேள்விகள் அடுக்கப்பபடுகின்றன.
தெலுங்கு படம் ஒன்றில், மூன்று நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் பாடலுக்கு நடனமாட ஊர்வசி, ரூ.3 கோடி சம்பளம் கேட்டதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
தமிழில் ‘லெஜென்ட்’ படத்தில் நடிக்க இவர் சில கோடிகள் ஊதியமாகப் பெற்றதாகவும் கூறப்பட்டது.

