‘கயல்’ படத்தில் நடித்த பிறகுதான் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகச் சொல்கிறார் நடிகை ஆனந்தி.
இதுநாள் வரை நல்ல கதைகள், கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு தமக்கு தன்னால் அமைந்து வருவதாக சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ரசிகர்கள் இந்த அளவுக்கு என்னை நேசிப்பார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. நல்ல கதாபாத்திரம் என்றால் உடனே ‘கயல்’ ஆனந்தியை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றுகிறது. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்,” என்கிறார் ஆனந்தி.
நடிகையாக வேண்டும் என்று தொடக்கத்தில் தாம் விரும்பியதே இல்லை என்றும் தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியும் மனநிறைவு தருவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சில சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனினும் இன்று வரை ‘கயல்’ படத்தில் நடித்ததுதான் பெரும் சவாலாக இருந்தது. வாழ்க்கையில் மறக்க முடியாத படைப்பாகவும் அந்தப் படம் மனதில் நிலைத்திருக்கும்,” என்றார் அவர்.

