தமிழ் திரையுலகில் முக்கிய இளம் இயக்குநர்கள் பட்டியலில் உள்ளவர்களில் அட்லீயும் ஒருவர்.
அவர் தற்போது ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ் நட்சத்திரம் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ‘ப்ரீ ரிலீஸ்’ விழா என்று அழைக்கப்படும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், நடன இயக்குனர் ஷோபி, ‘ஜவான்’ படத்தை தமிழகம், கேரளாவில் வெளியிடும் விநியோகிப்பாளரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அனிருத் பேசினார்.
தமக்கு வாய்ப்பு கொடுத்த சகோதரர் இயக்குநர் அட்லீக்கும் நன்றிகளைத் தெரிவித்தார் அனிருத்.
“சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண செயல் அல்ல, சவாலானது.”
“பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.”
“ஷாருக்கான் படத்தில் இடம்பெற்றது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா? என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஷாருக்கானுடன் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் ஒரு மணி நேரம் பேசுவோம். அந்த பேச்சு தற்போது இல்லாதது சற்று வருத்தம் தருகிறது.”
ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார் என்றார் அனிருத்.
அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஷாருக்கானும் அனிருத்தும் மேடையில் சின்ன நடனமும் ஆடினர்.
இந்நிலையில், ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம் வியாழக்கிழமை வெளியானது.
ஷாருக்கானின் அதிரடி நடிப்பு, கலகலப்பான வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மும்பையின் புகழ்பெற்ற கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் ‘ஜவான்’ திரைப்படம் காலை 6 மணி காட்சியாக திரையிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு இந்தி திரைப்படம் காலை 6 மணிக்கு வெளியாகுவது இதுவே முதல்முறை.
தற்போது படத்தின் விளம்பர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் தங்களது சமூக ஊடகங்களில் படத்தை விளம்பரம் செய்தும் வருகின்றனர்.
உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டமும் திரையிடப்பட்டது.
வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு முன்னோட்டம் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னோட்டத்திற்குப் பிறகு அங்குள்ள ஏராளமான ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவரது படங்கள் வெளியாகும்போது அவர் பற்றிய காணொளி புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜவான் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக ரீதியாகவும் வசூலில் சாதனைப்படைக்க வேண்டும் என்பதில் ஷாருக்கான் அதிக கவனம் செலுத்திவருகிறார்.

