ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தகவல் வெளியாகி உள்ளது.
வேறொன்றுமில்லை... ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வசூல் வெற்றியைத் தொடர்ந்து அதன் நாயகன் ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் தயாரிப்புத் தரப்பு புது கார் மற்றும் ரொக்கப் பரிசு அளித்து கௌரவித்துள்ளது.
அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் புதிய பழக்கம் உருவாகி உள்ளது. ஒரு திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றிபெற்றால் அதன் இயக்குநருக்கு பட நாயகன் அல்லது தயாரிப்பாளர் புதிய கார் ஒன்றை பரிசளிக்கிறார்.
அதிர்ஷ்டம் இருந்தால் வெளிநாட்டுக் கார் பரிசாகக் கிடைக்கும். ‘விக்ரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கார் பரிசு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ பட வசூல் ரூ.600 கோடியை நெருங்கி வரும் நிலையில் இயக்குநர் நெல்சனுக்கும் விலையுயர்ந்த கார் ஒன்று பரிசாகக் கிடைத்துள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசளித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, நெல்சனுக்கு காசோலை ஒன்றும் கொடுத்துள்ளார். அதில் எவ்வளவு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இந்தக் காசோலை தம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நெல்சன்.
இதற்கிடையே, ‘ஜெயிலர்’ நாயகன் ரஜினிக்கும் புதிய ‘பிஎம்டபிள்யூ’ காரும் காசோலையும் பரிசளித்துள்ளார் கலாநிதி மாறன்.
இதையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.