தான்யா: ஒருவரைச் சிரிக்க வைப்பது எளிதன்று

3 mins read
17af123f-9250-4a46-b8cc-2813e94ead7c
தான்யா. - படம்: ஊடகம்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘கிக்’ படத்தில் முதல் முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தான்யா ஹோப்.

இந்தப் படத்தில் காலஞ்சென்ற மனோபாலா, கோவை சரளா, செந்தில், பிரம்மானந்தம் ஆகிய அனுபவசாலிகளுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் ஒரு பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒருவரை சிரிக்க வைப்பது மிகக் கடினம் என்று மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். முன்னணி கதா நாயகர்களும் நாயகிகளும்கூட தங்கள் பேட்டிகளில் இவ்வாறு குறிப்பிடுவதைக் கவனித்திருக்கிறேன்.

“அதனால் நகைச்சுவை வேடத்தில் நம்மால் நடிக்க முடியுமா என்ற கேள்வி அவ்வப்போது என் மனத்தில் எழும். அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக ‘கிக்’ படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்தேன்.

“அனுபவசாலிகள் குறிப்பிட்டதுபோல் நகைச்சுவையாக நடிப்பது அவ்வளவு எளிதன்று என்பதை படப்பிடிப்பின்போது அனுபவ ரீதியில் புரிந்துகொண்டேன்,” என்கிறார் தான்யா ஹோப்.

இப்படத்தில் தனது சிகையலங்காரம் தமக்கே பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக வேறு வழியின்றி அந்தத் தோற்றத்தில் நடித்தாராம்.

படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களைப் பேட்டியில் விவரித்துள்ளார்.

“குட்டையான சிகையலங்காரம் என்பதால் ‘விக்’ வைத்து நடிக்க வேண்டியிருந்தது. இதனால் சங்கடமாக உணர்ந்தேன். இது குறித்து இயக்குநரிடம் கூறியபோது கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஒப்பனையும் தோற்றமும் அவசியம் என்றார்.

“என்னிடம் இருந்து மாறுபட்ட நடிப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை அவர் பேசியபோது தெரிந்தது. அதனால் அந்த வார்த்தைகளை என்னால் மீற முடியவில்லை.

“இந்தப் படத்தில் நைனா என்ற இளம்பெண் வேடத்தில் நடித்த பின்னர், மற்ற பெண்கள் குறித்து சிந்திக்கும் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் எடை போட்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்தேன்.

“இந்தப் படத்தில் மனோபாலா, கோவை சரளா போன்றவர்கள் நடிப்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. இயக்குநர் ‘ஆக்‌ஷன்’ என்று சொன்ன அடுத்த நிமிடமே தங்கள் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்கள்.

“நொடிப்பொழுதில் ஏற்படும் இந்த மாற்றத்தை வெகுவாக ரசித்தேன். சில சமயங்களில் இவ்வாறு ரசித்துக்கொண்டே எனக்கான வசனங்களைப் பேச மறந்துபோனதும் உண்டு. மேலும், அவர்கள் நடிப்பதைப் பார்க்கும்போது ஏதோ நாடகம் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்று இருக்கும்,” என்று பாராட்டுகிறார் தான்யா.

ஒருமுறை படப்பிடிப்பின்போது தனிப்பட்ட காரணங்களால் குழப்பமான மனநிலையில் இருந்தாராம். இவரது முகத்தில் கவலை தென்படுவதைக் கவனித்த கோவை சரளா, அது குறித்து விசாரித்தாராம்.

“நம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் இருக்கும். கடந்து போனவற்றை நினைத்து வருத்தப்பட்டாலோ கவலைப்பட்டாலோ ஒன்றும் மாறப்போவதில்லை.

“நாம் வாழ்க்கையை ஒவ்வொரு நாளாக அணுக வேண்டும். இன்று என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்வோம். அதைப் பற்றி மட்டுமே யோசிப்போம் என்றார் கோவை சரளா.

“அவரது இந்த அறிவுரை என் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்,” என்கிறார் தான்யா.

இவரது நடிப்பில் அடுத்து, ‘வெப்பன்’’, ‘ரணம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்கள், கதாபாத்திரங்களைத் தேடுகிறீர்களா என்று கேட்டால், ‘அப்படி எல்லாம் இல்லை’ என்கிறார்.

“ என் கண்களுக்குத் தெரியும் பாதையில் செல்கிறேன். அப்போது என்னைத் தேடி வரும் வாய்ப்புகளையும் ஏற்கிறேன். அவை மாறுபட்ட கதைகளாக இருந்தால் மகிழ்ச்சி,” என்கிறார் தான்யா.

குறிப்புச் சொற்கள்