உண்மைச் சம்பவங்களை அலசும் ‘டீமன்’ திரைப்படம்

2 mins read
c69e3de9-5c84-4b70-b8b8-e181c06fc2a4
‘டீமன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘டீமன்’ திரைப் படம்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் இது.

“டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் வீட்டினுள் இறந்து கிடந்தனர். அந்தச் செய்தியைப் படித்தால் இப்போதுகூட படபடப்பாக உணர்வீர்கள்.

“அந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். இயக்குநர் வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ படம் துவங்கி இப்போது வரையிலும் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

“துணை இயக்குநராக அவரிடம் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் தனித்து படம் இயக்க கைகொடுத்தது,” என்கிறார் ரமேஷ் பழனிவேல்.

முதல் படத்திலேயே திகில், மர்மம் நிறைந்த கதையை உருவாக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பினராம். அறிமுக இயக்குநர் உட்பட அனைவருக்குமே தங்கள் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆசைப்படுவர் என்றும் தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் சொல்கிறார்.

“திகில் படங்கள் ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்துவிடும். பொதுவாக ‘ன்’ என்ற எழுத்துடன் முடியும் தலைப்புகளைக் கொண்ட படங்கள் பேரளவில் வெற்றிபெற்றுள்ளன. ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘நாயகன்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

“சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் பிற மொழி பார்வையாளர்களுக்கும் பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். தீய சக்தி, அமானுஷ்யம், சாத்தான் இதைத்தான் ‘டீமன்’ என்போம்.

“பலதரப்பட்ட உண்மையான, மர்ம சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். குறிப்பாக டெல்லி புராரி மர்ம மரணங்கள் என்னை அதிகம் பாதித்தன. அதுதான் என் படத்தின் அடிப்படைக் கரு,” என்கிறார் இயக்குநர் ரமேஷ் பழனி வேல்.

‘டீமன்’ படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் மிரண்டு போவார்கள் என்று குறிப்பிடுபவர், எந்த அளவுக்கு பயம் கொடுக்கறோமோ, எந்த அளவுக்கு திகில் காட்சிகளைக் கச்சிதமாக அமைக்கிறோமோ, அதை வைத்துதான் இதுபோன்ற படங்களின் வெற்றி தீர்மானிக்கப்படும் என்கிறார்.

“இந்தப் படத்துக்காக அனைவரும் நூறு விழுக்காட்டுக்கும் மேல் உழைத்திருக்கிறோம். படத்திற்கு ஒலி அமைப்பு மிக முக்கியம். ஒலிப்பதிவு நிபுணர் ரோனியின் பங்களிப்பு வெகுவாகக் கைகொடுத்தது,” என்கிறார் ரமேஷ் பழனிவேல்.

‘டீமன்’ திரைப்படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்