தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வருகிற 10ஆம்தேதி நடக்கவிருப்பதால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் அன்று இடம்பெறாது என்று தெரிவிக்கப்படாது.
பேரவைக் கூட்டம் காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெறுகிறது.
நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுக்குழுவிற்காகப் படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.
பேரவைக் கூட்டத்தில் துணைத் தலைவர் கருணாஸ், ஆண்டறிக்கை வாசித்து, தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொதுச்செயலாளர் விஷால் சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி உரையாற்ற, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
பேரவைக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் உட்பட நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

