வித்தியாசமான கதைகளை விரும்பும் விக்ரம் பிரபு

வித்தியாசமான கதைகளை விரும்பும் விக்ரம் பிரபு

2 mins read
7e71ce89-df48-40f5-a9f4-c1412a6a1135
படம்: - ஊடகம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி, வித்தியாசமான படங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார், விக்ரம் பிரபு.

சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

தற்போது அவர் ரெய்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிடித்ததை செய்வது தான் தமது பலம் என்றார் விக்ரம் பிரபு.

ஒரு கதையின் மூலம் வெற்றி கிடைத்துவிட்டால் அதே மாதிரியான கதைகளை மட்டும் தொடர்ந்து செய்யாமல் கதைக்களத்தை மாற்றிக்கொண்டே இருப்பேன் என்றார் அவர்.

இருப்பினும் சில நேரங்களில் அந்த முயற்சி சரியான பலனைத் தருவதில்லை. ஆனாலும் ஒரு நல்ல பாடமாக அமையும் என்றார் விக்ரம் பிரபு.

தற்போது காலம் மாறிவிட்டது. படங்களும், ரசிகர்களோட மனநிலையும் மாறிவிட்டது. அதனால் தான் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார். 

சினிமாவை பொறுத்தவரை எல்லா வகையிலும்  பொழுதுபோக்கு அம்சங்களைத் தர முடியும். அதனால் தொடர்ந்து புத்தாக்கமாக இருப்பது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது தாம் நடித்துள்ள இறுகப்பற்று திரைப்படம் இம்மாதம் வெளியாகக்கூடும் என்று நம்பிக்கைத் தெரிவித்த விக்ரம், அந்த படம் கணவன் - மனைவி இடையே உணரவேண்டிய, புரிதலுக்கான படம் என்றார்.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான படம் என்று அவர் கூறினார்.

ஒரு நல்ல வரலாற்று கதைக்கொண்ட படத்தில் நடிக்க ஆசை. ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தில் 45 வயது கதாபாத்திரத்தில் நடித்தேன், அது சவாலான ஒன்றாக இருந்தது. இருந்தாலும் டாணாக்காரன் படத்தில் பாடுபட்டதைப் போல் எந்த படத்திலும் க‌ஷ்டப்பட்டதில்லை.

“டாணாக்காரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி, தோல்வி கதாநாயகனின் கையில் இல்லை, இயக்குநர் கையில் தான் உள்ளது”

சொன்ன வேலையை சரியாக முடித்துக் கொடுப்பது தான் கதாநாயகனின் வேலை. ஒரு படத்தின் வெற்றி அதில் உழைத்த அனைவருக்கும் சொந்தமானது, அது கதாநாயகனுக்கும் மட்டும் இல்லை என்றார் விக்ரம் பிரபு.

தாத்தா சாதித்ததை போல் சாதிப்பது கடினமான ஒன்று, அவர் சாதித்ததில் ஓரளவு நான் செய்துள்ளேன், அதை நீயும் பின்பற்றினால் நல்லது என்று தமது தந்தை கூறியதை விக்ரம் பிரபு நினைவுகூர்ந்தார்.

கிடைத்த வேலையை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது, அதனால் தேவையில்லாத சர்ச்சைகள் இல்லை. தாத்தா, அப்பாவை பார்த்து வளர்ந்தவன் நான்.  அதனால் அவர்களின் சம்பாதித்த நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக விக்ரம் பிரபு குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்