குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

2 mins read
1423d303-8c6a-4aab-b6c3-57929fe140f4
மாரிமுத்து. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

அண்மையில் வெளியீடு கண்ட, ‘ஜெயிலர்’ உட்பட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் மாரிமுத்து. தற்போது ‘எதிர் நீச்சல்’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வந்தார்.

இந்தத் தொடருக்கான பின்னணிக் குரல் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கான வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தபோதே மாரிமுத்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மயக்கமடைந்த மாரிமுத்துவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான வருசநாடு பகுதியில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

சென்னை முகலிவாக்கத்தில் புதிதாக வீடு கட்டி வந்தார் மாரிமுத்து. அதனால் கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்ததாகவும் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

மாரிமுத்துவின் திடீர் மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உதவி இயக்குநராக தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய மாரிமுத்து பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டார். கடும் முயற்சியின் பலனாக ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய இரு படங்களை இயக்கினார்.

எனினும், பெரிய வெற்றியைப் பெற முடியாத நிலையில், படம் இயக்குவதற்கான தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சித் தொடரில் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“இத்தனை ஆண்டுகால கலைப் பயணத்தில் இப்போதுதான் வெற்றி என்பதை மனதார அனுபவிக்கிறேன்,” என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவந்துள்ளார் மாரிமுத்து.

எனினும், இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியை அவரால் நீண்டகாலம் அனுபவிக்க முடியாமல் போனதுதான் சோகம்.

குறிப்புச் சொற்கள்