முப்பத்து மூன்று நாள்களில் தனது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகப் போவதை அறிந்ததும் உற்சாகத்தில் மிதந்ததாகச் சொல்கிறார் மகிமா நம்பியார்.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மலையாளத்தில் இவர் நடித்த ‘ஆர்டிஎக்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. குறுகிய காலத்தில் ஐம்பது கோடி ரூபாய் வசூல் கண்டதை அடுத்து மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மகிமா.
இந்த மாதம் மகிமா நடித்த இரண்டு படங்கள் தமிழில் வெளியாக உள்ளன. அவற்றுள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ‘சந்திரமுகி 2’ படமும் ஒன்று. இந்தப் படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்துள்ளார் மகிமா.
அதேபோல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சி.எஸ் அமுதன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ரத்தம்’ திரைப்படமும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது.
“அந்த வகையில் 33 நாள்களுக்குள் எனது நடிப்பில் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாவது பெரிய விஷயம். இதன் மூலம் எனது திரைப் பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாக உணர்கிறேன்,” என்கிறார் மகிமா.
தமிழில் ‘சாட்டை’, ‘குற்றம் 23’, ‘கொடிவீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மகிமா. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் ரசிகர்கள் மனத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ளார்.


