இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இதில் ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் தொழில்நுட்பப் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன.
இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுடன் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் அளித்த பேட்டியில் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன் சங்கரின் ‘நண்பன்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
படத்தை வரும் ஜனவரி மாதம் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற முக்கிய திரைப்படம்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தொடர்பாகவும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
விஷால், எஸ்.ஜே.சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘மார்க் ஆண்டனி’ வரும் 15ம் தேதி வெளியாகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்தியா முழுவதும் வெளியாகும் இதை, மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
“எஸ்.ஜே.சூர்யா ஒரு நல்ல நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் ஒரு காட்சியில் அவர் நான்கு பக்க வசனத்தை பேச வேண்டும் அப்போது நான் அவர் அருகில் இருந்து கவனித்தேன். வசனத்தின் போது பல விதமாக நடித்துக்காட்டினார், அவர் அந்த காட்சியை நடித்து முடித்த பின்னர் என்னையறியாமலேயே கைதட்டத் தொடங்கிவிட்டேன்” என்றார் விஷால்.
எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்ததன் மூலம் நடிப்பு தொடர்பான பாடத்தை மேலும் கற்றுக்கொண்டதாக விஷால் கூறினார்.
‘மார்க் ஆண்டனி’யின் முன்னோட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.