அனுஷ்கா திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்த புதுப்படம் வெளியாக உள்ளது.
கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ படம் தமக்கு மீண்டும் திருப்புமுனை தரக்கூடிய படமாக அமைந்துள்ளது என்கிறார் அனுஷ்கா.
“கடந்த 2018ஆம் ஆண்டு ‘பாகமதி’ படம் வெளியீடு கண்டதும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். ஒருசில மாதங்களில் பட வேலைகள் முடிந்துவிடும் என தயாரிப்புத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால்தான் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
“நான் விரும்பிய காலம் வரை ஓய்வெடுத்த பிறகுதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தேன். அவற்றுள் பிடித்தமான சில கதைகளை மட்டும் தேர்வு செய்துள்ளேன்,” என்கிறார் அனுஷ்கா.
எனவே இவர் அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எப்படிப் பொழுதைக் கழித்தீர்கள் என்ற கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
“எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாற்றமடைகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“நிறைய அனுபவங்களைப் பெறுவதும் பலவற்றைக் கற்றுக்கொள்வதும் நல்ல விஷயம்தான். எனினும் புது விஷயங்கள் என்பன தொடர்ந்து உருவாகிய வண்ணம் இருக்கும். எனவே நமக்கு எல்லாம் தெரியும் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. ஓய்வில் இருந்தபோது இந்த உண்மையைப் புரிந்துகொண்டேன்,” என்று சொல்லும் அனுஷ்கா, அண்மையில் தனது திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் பாகுபலி பட நாயகன் பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
இந்நிலையில் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தம்மிடம் எந்தப் பதிலும் இல்லை என்றார் அனுஷ்கா.
“நம்புங்கள், இந்தக் கேள்விக்கு என்னிடம் எந்தவிதமான பதிலும் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. நாள்கள் கடந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றில்லை. அது நடக்கும் என்றால் நிச்சயம் நடக்கட்டும். நானும் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சரியான ஒருவர் கிடைக்கட்டும்,” என்கிறார்.
எதிர்காலம் குறித்து தாம் ஏதும் முடிவு செய்யவில்லை என்றும் சில ஆசைகள் நிறைவேறினால் மகிழ்ச்சி என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மலையாளத்தில் எனது முதல் படமான ‘கத்தனர்’ பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என விரும்புகிறேன். இதில் எனக்கு இதுவரை நடித்திராத கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதேபோன்ற கதாபாத்திரங்கள் பிற மொழிகளிலும் அமைய வேண்டும் என்பது அடுத்த ஆசை.
“தமிழிலும் தெலுங்கிலும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவையும் வெற்றிபெற்றால் மகிழ்வேன்.
“எனக்கு நல்ல ரசிகர்கள் வாய்த்துள்ளனர். அவர்கள் மனநிறைவும் உற்சாகமும் அடையும் வகையில் நல்ல படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை ஆசை,” என்கிறார் அனுஷ்கா.

