விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
அவருக்கு ஜோடியாக முன்னாள் நாயகியின் மகள் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற ஆரூடத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது லைகா நிறுவனத்தின் அண்மைய அறிவிப்பு.
அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
ஜேசன் சஞ்சய்க்கு 23 வயதாகிறது. சென்னையில் உள்ள அமெரிக்கன் அனைத்துலக பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, மேற்படிப்புக்காக அமெரிக்கா பறந்துவிட்டார்.
தொடக்கத்தில் இருந்தே இவருக்கு நடிப்பில் ஆர்வமில்லையாம். தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் வழியில் படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருந்துள்ளது. அதனால் திரைப்பட உருவாக்கம் தொடர்பான படிப்பைத் தேர்வு செய்து படித்து வந்தார்.
கல்லூரிப் படிப்பின்போது இவர் தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய குறும் படங்கள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. சமூக ஊடகங்களில் அவை வெளியானபோது ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.
இதையெல்லாம் கவனித்த விஜய்யும், ‘நடிப்பு வேண்டாம், இயக்குநராக முயற்சி செய்’ என்று மகனைத் தட்டிக்கொடுத்து ஊக்கம் அளித்தாராம்.
இத்தனைக்கும் தமிழ், இந்தியச் சினிமாவில் முன்னணியில் உள்ள பெரிய இயக்குநர்களும்கூட விஜய் மகனை நாயகனாக அறிமுகப்படுத்த விரும்புவதாகக் கூறியதாகவும் அந்த வாய்ப்புகள் எதையும் ஜேசன் சஞ்சய் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சஞ்சய் இயக்கிய ‘சிரி’, ‘ஜங்ஷன்’ உள்ளிட்ட குறும்படங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவற்றில் அவரே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை யாராவது சுட்டிக்காட்டினாலும், இயக்கம்தான் தனது இலக்கு என்று கூறிவிடுகிறார்.
“தந்தையைப் போல் ஜேசன் சஞ்சய்யும் பழக எளிமையானவர். அதிகம் பேச மாட்டார். பெரிய நடிகரின் வாரிசு என்ற பந்தா அறவே இல்லாதவர். எப்போதும் திரைப்பட இயக்கம், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து மட்டுமே உரையாடுவார்,” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

