தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி

2 mins read
960c5c41-2013-4661-9878-03f79f7710fb
ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

ரஜினியின் 171வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினியின் புதுப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியீடு கண்ட ‘ஜெயிலர்’ படம் வசூலில் சாதனை படைத்தது. குறுகிய நாள்களில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல்கண்ட இப்படத்தை அடுத்து, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.

இது அவரது 170வது படமாகும். இதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 19ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது. எனினும் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பின்னர் திடீரென தயாரிப்புத் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது.

எனினும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.

ஞானவேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துக்குள் முடிவடையும் என்றும் பிப்ரவரி மாதத்தில் இருந்து லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்றும் தெரிகிறது.

இந்தப் படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் வசூலில் சாதனை புரிந்தது. சிறு வயது முதல் தாம் கமல்ஹாசனின் ரசிகர் என்றும் ‘விக்ரம்’ படத்துக்கான ஒவ்வொரு காட்சியையும் கமலை மனதில் வைத்துத்தான் எழுதியதாகவும் அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். இந்தப் படமும் ‘விக்ரம்’ போலவே அதிரடி, அடிதடிப் படமாக இருக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர்களாக அன்பறிவ் சகோதரர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை பணியாற்றிய திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

‘விக்ரம்’ படத்துக்கான துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளில் கமல்ஹாசனின் நடிப்பு மிக இயல்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அப்படத்தின் வெற்றிக்கு சண்டைக் காட்சிகளும் பங்களித்து இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

எனவே, ரஜினி படத்துக்கும் மிக விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை இருவரும் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டைப் பயிற்சியாளர்களாக அன்பறிவ் சகோதரர்களை ஒப்பந்தம் செய்ய இருப்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனராஜ், தயாரிப்புத் தரப்புடனும் ரஜினியுடனும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அன்பறிவ் சகோதரர்கள் குறித்து லோகேஷ் விவரிக்கும் முன்னர் ரஜினியே இருவரும் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகப் பாராட்டினாராம்.

இதேபோல், அனிருத்தும் இந்தப் படத்துக்கு மாறுபட்ட இசையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் லோகேஷுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்