நரைமுடி, அர்ப்பணிப்பு: அசத்தும் ஜெயம் ரவி

நரைமுடி, அர்ப்பணிப்பு: அசத்தும் ஜெயம் ரவி

3 mins read
80680ad4-0051-44b2-93bf-235396b6d7fd
ஜெயம் ரவி. - படம்: ஊடகம்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சைரன்’. ஆண்டனி பாக்யராஜ் இயக்கி உள்ளார்.

இவர் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தின் கதையை எழுதியவர். தற்போது கதாசிரியர் பணியைக் கவனிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார்.

“நான் எழுதிய கதைக்கு ஜெயம் ரவி மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டேன். வேறொரு நாயகனை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதவில்லை என்றும் கூறலாம்.

“நிறைய ஆச்சரியங்களும் திருப்பங்களும் நிறைந்த கதை இது. எனவே, முழுக் கதையையும் கேட்ட அடுத்த நிமிடமே அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த வகையில் இதை எனது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்,” என்கிறார் ஆண்டனி பாக்யராஜ்.

‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ ஆகிய படங்களின் கதைகளிலும் இவரது பங்களிப்பு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘சைரன்’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.

“ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி அதை வெளியிட்டோம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, ஜெயம் ரவிக்கு இதைவிட சிறந்த பரிசு கிடைத்திருக்காது என நம்புகிறேன்.

“முழுநீள அடிதடியும் திகிலும் நிறைந்த படமாக ‘சைரன்’ உருவாகி வருகிறது. அதே வேளையில் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் போதுமான அளவு உள்ளன.

“இதில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடங்கள் அமைந்துள்ளன. இரண்டுமே ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. மேலும், நாயகனின் தோற்றமும் மாறுபட்டதாக இருக்கும்.

“இளைஞனாகவும் 45 வயது ஆடவராகவும் தோன்றி தனது நடிப்பால் அனைவரையும் கவர்வார் ஜெயம் ரவி. அவரிடம் எனக்குப் பிடித்தமான விஷயங்களில் அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் முக்கியமானவை.

“மேலும், தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுவதற்கு மிகவும் மெனக்கெடுவார். இந்தப் படத்தில் அவர் உடல் மொழிக்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது. இதைப் புரிந்துகொண்டு மற்ற படங்களில் நடித்தபடியே, ஓய்வு கிடைக்கும்போது இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார்.

“ஒரு கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்து, நரைமுடியுடன் நடிக்க வேண்டியிருந்தது. அவரிடம் இதற்கான மாற்றத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. அதன் மூலம் அவர் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார் என்பதை உணர முடியும்.

“இதுபோன்ற விஷயங்களைத் திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் கொடுத்த காசு சரியாகிவிடும். அதற்கும் மேல், ஒரு தரமான படைப்பைப் பார்த்த மனநிறைவு ரசிகர்களுக்கு ஏற்படும்,” என்கிறார் ஆண்டனி பாக்யராஜ்.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பெரும்பாலான முக்கியமான காட்சிகளைப் படமாக்கிவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சிகளில் உள்ள சில தவறுகள் திருத்தப்படும் என்றும் அதன் பின்னர் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

“நான் இதற்குமுன் எழுதிய கதைகளின் சாயல் ‘சைரன்’ படத்தில் இருக்குமா என்று கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதை களைச் சொல்லவே விரும்புகிறேன்.

“ஒரே மாதிரியான கதைகளும் காட்சி அமைப்புகளும் இருக்காது. நான் முன்பே குறிப்பிட்டது போன்று நிறைய திருப்பங்கள் கொண்ட கதையைத்தான் ஜெயம் ரவிக்காக உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் ஆண்டனி பாக்யராஜ்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்