ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரபலங்கள்

2 mins read
fcdcfaa5-16c0-4b96-b147-5dd123c2c5d1
படம்: - ஊடகம்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

நுழைவுச்சீட்டு வாங்கியும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நிகழ்ச்சி தொடர்பாக பலர் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாகச் சாடினர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவுக் குரல் கொடுத்துவருகின்றனர்.

“ 30 ஆண்டுகளுக்கு மேலாக நமது அன்புக்குரியவராக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்து வருகிறார். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது, இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பாதிக்கப்பட்டிருப்பார். தனது குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, இருப்பினும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக தான் நிற்கிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரஹ்மான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பைத் தவிர்த்து அன்பைத் தேர்ந்தெடுங்கள்,” என்று நடிகர் கார்த்தி சமூக ஊடகம் வழி ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில், நுழைவுச்சீட்டு இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் கிட்டத்தட்ட 4,000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நுழைவுச்சீட்டின் நகலை சரி பார்த்து கட்டணத்தைத் திருப்பி அளித்து வருகின்றனர்.

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

“இசை நிகழ்ச்சியில் சிறப்பாக எனது கடமையைச் செய்ய வேண்டும், மற்ற ஏற்பாடுகள் உரிய வகையில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைத்தேன். உள்ளே மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டு இருந்தேன். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

“நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். இந்தச் சம்பவத்துக்கு யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. இது எனக்கு ஒரு பாடம். இனிமேல் இதுபோல் நடக்க விடமாட்டேன்,” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை அடுத்து, பள்ளிக்கரணை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்