முன்னணி கதாநாயகர்களுக்கு சிவப்பு அட்டை: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு

முன்னணி கதாநாயகர்களுக்கு சிவப்பு அட்டை: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு

2 mins read
615bfe3a-7fa2-458e-a207-cb791738a601
(இடமிருந்து வலமாக) நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் தலைநகரான கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் எப்போது முட்டல், மோதல் தொடங்கும் எப்போது முடியும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

சில மாதங்களுக்கு முன்புதான் சில முன்னணி கதாநாயகர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் வலியுறுத்தினர். அந்நடிகர்கள் அதிக ஊதியம் கேட்பதாகவும் தயாரிப்புத் தரப்புக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் புகார்கள் அடுக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் சில முன்னணி நடிகர்களைக் கட்டம்கட்ட தீர்மானித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

சென்னையில் நடைபெற்ற அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்டோருக்கு ‘சிவப்பு அட்டை’ வழங்கி எச்சரிப்பது என முடிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு ஆளாகும் நடிகர்கள் புதுப்படங்களில் ஒப்பந்தமாவதிலும் தற்போது அவர்கள் நடித்து வரும் படங்களை வெளியிடுவதிலும் சிக்கல்கள் எழும்.

தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்த படத்தில் சிம்பு நாயகனாக நடித்தார். அப்போது அவர் உரிய ஒத்துழைப்பு வழங்காததால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கல் ராயப்பன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தப் புகாரின் பேரில் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்கத்தின் வரவு செலவை முறையாகப் பராமரிக்கவில்லை என்ற புகாரால் விஷாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘தேனாண்டாள்’ முரளி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அதர்வா உள்ளிட்ட மேலும் சிலர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

இம்முறை அந்தப் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பது என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு நடிகர்கள் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அநேகமாக நடிகர் சங்கக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அப்போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்