காத்திருக்கும் கதாநாயகி

3 mins read
bc3f0153-5f69-4be0-961d-30fe9a07b441
தான்யா. - படம்: ஊடகம்

நான் ஒரு வீட்டுப் பறவை. வெளியே சுற்றித் திரிவதில் ஆர்வம் இல்லை என்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.

எட்டு ஆண்டுகால திரைப்பயணம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுபவர், எந்த நேரத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அவற்றுள் முக்கியமானது என்கிறார்.

தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள அண்மைய பேட்டியில் மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ள தான்யா, தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“’பி.பி.180’ என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் என்னைக் காண முடியும். இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களம். மேலும் ஒரு தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். இரண்டு பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது குறித்து இப்போது ஏதும் தெரிவிக்க இயலாது,” என்று சொல்லும் தான்யா, தனது தாத்தாவும் பழம்பெரும் நடிகருமான ரவிச்சந்திரனைப் போன்று நேரந்தவறாமையில் கவனமாக உள்ளார்.

குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருபவர், கால்ஷீட் குளறுபடிகள் செய்யாதவர் என்ற நற்பெயரைச் சம்பாதித்துள்ளார்.

“தாத்தா கடும் உழைப்பாளி என்பது எல்லாருக்கும் தெரியும். உரிய நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இல்லையென்றால் தலையே வெடித்துவிடுவதுபோல் தோன்றும். தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று.

“ஒரு நடிகை என்றால் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஓய்வு கிடைத்தால் நெருக்கமான தோழிகளின் வீடுகளுக்குச் சென்று அரட்டையடிப்பேன். இல்லையெனில் தோழிகள் என் வீட்டுக்கு வருவார்கள்.

“நாங்களே தேவையானதை சமைத்துச் சாப்பிடுவோம். அவ்வளவுதான், வேறு எதுவும் இருக்காது,” என்று சொல்லும் தான்யா, அடிப்படையில் திறமைவாய்ந்த பரதநாட்டியக் கலைஞர்.

தொடர்புடைய செய்திகள்

ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஏராளமான நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். தங்கை அபராஜிதாவுடன் இணைந்து அரங்கேற்றிய நடன நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தங்கை இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு வேலை பார்க்கிறார்.

“நடனத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசைகளுள் ஒன்று. அப்படிப்பட்ட வாய்ப்பு அமையாதா என காத்திருக்கிறேன்,” என்று ஏக்கத்துடன் குறிப்பிடும் தான்யா, காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசுவதில் தமக்கு ஆர்வம் இல்லை என்கிறார்.

கிசுகிசுக்களில் இருந்து தப்புவதற்காக தாம் இவ்வாறு சொல்லவில்லை என்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இப்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார்.

“இப்போதைக்கு நான் ஆசையாக வளர்க்கும் லக்சி, மீலா ஆகிய இரு நாய்க்குட்டிகளைத்தான் வெகுவாக நேசிக்கிறேன். அவர்களுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். பழைய படங்களைப் பார்ப்பதும் எனது முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

“நான் நடிக்கும் படங்களின் கதையை முதலில் நானும் அம்மாவும்தான் கேட்போம். பிறகு அப்பாவிடம் ஆலோசனை கேட்பேன். எனினும் இறுதி முடிவு என்னுடையதாகத்தான் இருக்கும்.

“பொதுவாக எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவது இல்லை. நியாயமான கருத்துகளை ஏற்க தயங்கியதும் இல்லை.

“கடற்கரை சாலையோரம் கிடைக்கும் மசாலா கடலை, படப்பிடிப்பு தளத்தில் சமைக்கும் மசாலா வடை ரொம்பப் பிடிக்கும். நிறைய படங்களில் நடிக்கும் ஆசையும் உண்டு.

“இந்திப் பட வாய்ப்புகளுக்காக நான் மெனக்கெட்டதில்லை. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். எந்த மொழியாக இருந்தாலும் மாறுபட்ட கதைக்களங்களில் நடிப்பதே என் விருப்பம்.

“எட்டு ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தாத்தா சம்பாதித்துள்ள நற்பெயருக்கு என்னால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. நல்ல நடிகை எனப் பெயரெடுப்பேன்,” என்று தனது ஆசைகளைப் பட்டியலிடுகிறார் தான்யா.

குறிப்புச் சொற்கள்