தமது நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இவரும் கௌரி கிஷனும் இணைந்து நடித்துள்ள ‘அடியே’ படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய ஜி.வி.பிரகாஷ், தமது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்துள்ள ‘பேச்சிலர்’, ‘செல்ஃபி’, ‘அடியே’ ஆகிய மூன்று படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளன என்றார்.
“நாம் நடித்த படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாவது பெரிதல்ல. அவை வியாபார ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் எனது படங்கள் லாபம் ஈட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“பணம் போட்டு படம் எடுப்பவர்கள் அதில் இருந்து லாபம் எடுப்பது இன்றைய சூழ்நிலையில் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனால், என்னை நம்பி படம் தயாரித்தவர்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்பதுடன், லாபம் கிடைத்திருப்பதை முக்கிய வளர்ச்சியாகக் கருதுகிறேன்,” என்றார் ஜி.வி.பிரகாஷ்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ள ‘அடியே’ படத்துக்கு இவர்தான் இசையமைத்துள்ளார்.

