திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்பதற்காக சுமார் 18 ஆண்டுகள் தாம் போராடியதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.
பல படங்களில் நடித்துள்ள அவர் இயக்கியுள்ள படம் ‘மார்கழி திங்கள்’. பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா, சரண் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இளையராஜா இசையமைத்துள்ளார். சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்துள்ள படம் இது.
இப்பட முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் பாரதிராஜா, தாம் உருவாக்கிய பல கதைகளை இயக்குநர் சுசீந்திரனிடம் அவ்வப்போது கூறி வந்ததாகவும் திடீரென ஒருநாள் தம்மை அழைத்து, படம் இயக்கும் வாய்ப்பை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
“இந்தக் கதையை நீங்களே இயக்கலாம் என்று சுசீந்திரன் கூறியதும் பதினைந்து நாள்களிலேயே படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். என்னுடைய முதல் படத்தில் இளையராஜா, பாரதிராஜா இணைந்திருப்பது எனக்குப் பெருமை.
“கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். மற்ற அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். நான் சிரமப்பட்ட காலங்களில் உடனிருந்த என் மனைவி, குழந்தைகளுக்கு நன்றி. செய்தியாளர்களை என் குடும்பத்தின் அங்கம் என்று சொல்லலாம். அவர்களுக்கும் நன்றி,” என்றார் மனோஜ் பாரதிராஜா.

