“திரைப்படங்களில் கதாநாயகர்கள் மட்டுமே சாகசங்களைப் புரிவதாகச் சித்திரிக்கிறார்கள். இந்த நிலை என்று மாறும் என்பது தெரியவில்லை,” என்கிறார் நடிகை ரீது வர்மா.
விஷால் நாயகனாக நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இவர்தான் கதாநாயகி.
இப்படத்தின் கதையை தம்மிடம் விவரித்தபோதே, இது நாயகனை முன்னிலைப்படுத்தும் படம் என்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெளிவாகச் சொல்லிவிட்டதாக அண்மைய பேட்டியில் ரீது குறிப்பிட்டுள்ளார்.
“அடிதடிக்கும் வணிக அம்சங்களுக்கும் முன்னுரிமை அளித்துத்தான் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர். குண்டர் கும்பல்களின் செயல்பாடுகள் குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை இயக்குநர் ஆதிக் முன்கூட்டியே தெரிவித்தார்.
“எனினும் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என அனுபவ கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எல்லாருக்கும் வாய்த்துவிடாது. அந்தக் காரணத்தாலும் நல்லதொரு வணிகப் படமாக உருவாகும் என்ற நம்பிக்கையிலும் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்,” என்று ரீது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தமிழில் முழுநீள வணிகப் படத்தில் தாம் நடித்ததில்லை என்றும் இயக்குநர் ஆதிக் கதையைச் சொன்ன விதம் தமக்குப் பிடித்திருந்தது என்றும் ரீது தெரிவித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. வெளியீடு தாமதமாவதில் ரசிகர்களைப் போலவே தமக்கும் வருத்தம் இருக்கிறது என்கிறார்.
“தமிழில் நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் உழைப்பை மீறிய அதிர்ஷ்டமும் இருந்தால்தான் சில விஷயங்கள் கைகூடி வரும். இதையும் உணர்ந்துள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
“உண்மையைச் சொல்வதானால் தமிழில் எனக்கு எந்தப் படமும் கைவசம் இல்லை. தெலுங்கில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். அது நாயகியை முன்னிலைப்படுத்தும் படம் என்ற வகையில் மகிழ்ச்சி,” என்று ரீது கூறியுள்ளார்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு முழுக் கதையையும் அதில் தமக்கான கதாபாத்திரத்தையும் நன்கு உள்வாங்கிக் கொள்வாராம்.
அதன் பின்னர் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் கவலைப்பட மாட்டாராம்.
“திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இதுதான் எனது கொள்கையாக உள்ளது. என்னுடன் இன்னொரு நாயகியும்கூட ஒரே படத்தில் நடிக்கக்கூடும்.
“ஆனால், ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் இன்னொரு நாயகி திரையில் என்ன செய்கிறார் என்பது குறித்து கவலைப்படுவதில் அர்த்தமில்லை.
“ஒரு படம் வெளியான பின்னர் அதில் நான் வெளிப்படுத்தி உள்ள நடிப்பு நிச்சயம் எனக்கான அடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
“என் திறமை மீது நான் வைத்துள்ள நம்பிக்கை இவ்வாறு சொல்ல வைக்கிறது,” என்கிறார் ரீது வர்மா.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ரீது, இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதால் தனது திறமை மெருகேறுகிறது என்றும் பல்வேறு புதிய விஷயங் களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது திரை ரசிகர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்வது மிக அவசியம் என்றும் இளையர்கள் தமது நடிப்பை வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ரீது வர்மா மேலும் கூறியுள்ளார்.

