தமிழில் தனது திறமைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை என்கிறார் மம்தா மோகன்தாஸ்.
‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார்.
மம்தாவை ‘நடிப்பு ராட்சசி’ என்றுதான் மலையாள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டும் திறமைசாலி என திரையுயலகத்தினரும் இவரைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பாராட்டு மழையில் நனையும் மம்தாவோ, விஜய் சேதுபதியையும் அவரது இயல்பான நடிப்பையும் மனதாரப் பாராட்டித் தீர்க்கிறார். விஜய் சேதுபதியை கடவுள் அனுப்பி வைத்த கலைஞன் என்கிறார்.
“விஜய் சேதுபதிக்கு ரசிகர்களின் பாராட்டுகளையும் கைத்தட்டல்களையும் பெறுவதற்கு வசனங்கள் தேவையே இல்லை. அவர் ஒரு காட்சியில் வந்து நின்றாலே போதும். தனது உடல்மொழியின் மூலம் ரசிகர்களுக்கு கடத்த வேண்டிய விஷயத்தை கச்சிதமாகக் கடத்திவிடுவார்.
“மகாராஜா’ பட விழாவில் என்னுடைய தீவிர ரசிகர் என்று அவர் கூறியதைக் கேட்டு வியந்தேன். உண்மையில் நான் அவரது தீவிர ரசிகை.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்து போனேன். பிறகு ‘சீதக்காதி’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இப்போது ‘மகாராஜா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும், அவர் கதாபாத்திரமாகவே மாறும் அந்தத் தருணத்தை மிக அமைதியாக ரசித்தேன்.
“அவர், மௌனத்திலிருந்தே நடிக்கத் தொடங்குகிறார். கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கும்போது நமக்குள் ஒருவித ஆழ்ந்த உள்அமைதியை உணர முடியும். அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய நிலையை எளிதில் எட்டிவிட இயலாது. ஆனால் விஜய் சேதுபதிக்கு இது எளிதில் கைகூடுகிறது. அதனால்தான் வேறொரு மனிதராக அவரால் உடனடியாக மாறிவிட முடிகிறது,” என்கிறார் மம்தா.
படப்பிடிப்புக்காக சென்னை, ஹைதராபாத் என்று பறந்தாலும், தமது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில்தான் மம்தாவை அதிகம் பார்க்க முடியும்.
பெங்களூரில் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன் பிறகு அடைந்த வளர்ச்சி அவரே எதிர்பாராத ஒன்று.
குறுகிய காலத்தில் முன்னணி மாடலிங் அழகியாக வலம் வரத் தொடங்கியவர், சூட்டோடு சூடாக திரையுலகிலும் அறிமுகமானார்.
அவரது நடிப்பு மட்டுமன்று, இசை ஞானமும் பெரிதாகப் பேசப்பட்டது. முறைப்படி கர்நாடக சங்கீதமும் இந்துஸ்தானி இசையும் கற்றுத்தேர்ந்தவர் என்பதால் பின்னணிப் பாடகியாகவும் உருவெடுத்தார் மம்தா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இவர் பாடிய பாடல்கள் வெற்றிபெற்றன.
எல்லாம் நல்லவிதமாக நடந்து கொண்டிருந்த வேளையில் திடீரென மம்தாவின் வாழ்க்கை எதிர்மறை திசையில் செல்லத் தொடங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோதுதான் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை தெரிந்துகொண்டார் மம்தா.
அதற்காக மனம் தளரவில்லை. சில ஆண்டுகள் புற்றுநோயுடன் நடந்த கடும் போராட்டத்தின் முடிவில், மம்தாவுக்குத்தான் வெற்றி கிடைத்தது.
நோயிலிருந்து மீண்டு வந்த பின்னர், மீண்டும் தனது கலையுலகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு என 45 படங்களில் நடித்துள்ளார் மம்தா.
“குறைந்த செலவில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதில் சிறந்த கதாபாத்திரங்கள் அமையக்கூடும். பெரிய படத்தில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்களும் பெயர் வாங்கித் தரக்கூடும். ஆனால், இவ்விரண்டு வாய்ப்புகளுமே தமிழில் எனக்கு அமையவில்லை. ஒருவேளை ‘மகாராஜா’ படம் இந்நிலையை மாற்றக்கூடும்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மம்தா.
அண்மையில் யுவன் சங்கர் ராஜா தனது இசையில் ஒரு பாடலைப் பாட மம்தாவுக்கு அழைப்பு விடுத்தாராம். அச்சமயம் வெளிநாட்டில் இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்கிறார்.
“இதே போல் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடிக்கவும் எனக்கு வாய்ப்பு தேடி வந்தது. அந்தச் சமயம் குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
“தொழிலா குடும்பமா என்ற கேள்வி எழுந்தபோது, குடும்பத்தை தேர்வு செய்தேன். அந்த தரமான படைப்பில் இடம்பெற முடியாமல் போன வருத்தம் இன்னமும் உள்ளது,” என்கிறார் மம்தா.


