கடந்தகால அனுபவங்கள் தம்மிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் விஷால்.
அனுபவங்கள்தாம் ஒருவரது மனதைத் திடப்படுத்தி அம்மாற்றங்களைச் செய்வதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பின்போது அடிபட்டு கேரளாவில் சிகிச்சை பெற்ற வேளையில் தன்னைப் பற்றி அதிகம் யோசித்ததாகவும் இனி எவ்வாறு வாழ வேண்டும், வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்று சிந்தித்ததாகவும் விஷால் கூறியுள்ளார்.
“முதலில் என் கோபத்தை அடக்கி ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று எல்லா வகையிலும் யோசித்தேன். அது இன்று பெரும் உதவியாக உள்ளது.
“இப்படி ஒரு விஷாலை என் பெற்றோர்கூட பார்த்ததில்லை. தரையில்தான் படுத்து துாங்குகிறேன். என் துணிகளை நானே துவைத்து, காயவைத்து, மிக இயல்பான மனிதனாக வாழ்கிறேன். இவற்றை மாற்றங்கள் என்று சொல்வதைவிட, அனுபவங்கள் என்னைச் சிறந்த மனிதனாக மாற்றியுள்ளன என்பேன். கெட்டவற்றை நீக்கிவிட்டு, நல்லதை மட்டும் ஏற்கிறேன்,” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர்களுக்கு தற்போது அரசியல் ஆர்வம் அதிகரித்துவிட்டதாக கூறப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள விஷால், இது அரசியல்வாதிகள் செய்த தவறுகளால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல்வாதிகள் நடிகர்களாக ஆகும்போது ஏன் நடிகர்கள் அரசியல்வாதி ஆகக்கூடாது. எதுவாக இருப்பினும் காலம், நேரம் எல்லாம் அமைய வேண்டும்.
“அதற்குள் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக கற்பனை செய்து வதந்தி பரப்புகிறார்கள். எனது அரசியல் பயணம், திருமணம் என எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக கேட்க வேண்டும். அவற்றுக்கான விளக்கங்களை அளிப்பதில் தயக்கம் இல்லை,” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது எஸ்.ஜே.சூர்யாதான் தனக்கு மிக நெருக்கமான நண்பர் என்றும் அவரிடம் இருந்து நடிப்பின் நுணுக்கங்களைக் கற்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ள விஷால், கருத்து வேறுபாடுகளைக் கடந்து இயக்குநர் மிஷ்கின் இன்றளவும் தனது நண்பர்கள் பட்டியலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“மிஷ்கினைப் பொறுத்தவரை அவர் மிகச் சிறந்த இயக்குநர். அவர் இயக்குநராகவும் நான் நடிகனாகவும் இருக்கும் பட்சத்தில் இணைந்து செயல்படலாம். ஆனால், தயாரிப்பாளராக இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. ’துப்பறிவாளன்-2’ படத்தைப் பொறுத்தவரை அனாதைப் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்திருக்கிறேன்,” என்று விஷால் தெரிவித்துள்ளார்.