திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று முப்பது ஆண்டு காலமாகப் போராடிய நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகத்தினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் அறிமுகமானார் பாபு. அதன் பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவின் அடுத்த ரஜினி, அடுத்த கமல்ஹாசன் என்று விமர்சகர்கள் பாபுவைப் புகழ்ந்தனர். ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற தலைப்பில் உருவான பாபுவின் ஐந்தாவது படம்தான் அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டது எனலாம்.
அப்படத்துக்காக சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. மாடியிலிருந்து கதாநாயகன் குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக் கொள்ளலாம்’ என்று இயக்குநர் அறிவுறுத்தியும்கூட, பாபு அதை ஏற்கவில்லை. காட்சி இயல்பாகவும் தத்ரூபமாகவும் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், தாமே கீழே குதித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. முதுகெலும்புகள் முறிந்ததால் படுத்த படுக்கையானார். எந்தவித சிகிச்சையும் அவர் மீண்டும் எழுந்து நிற்க கைகொடுக்கவில்லை.
விபத்து நடந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. திரையுலகில் சாதிக்க மொத்தம் 30 ஆண்டுகாலமாக அவர் போராடினார்.
“என்றாவது ஒருநாள் நான் எழுந்து நிற்பேன். மீண்டும் நடிப்பேன், சாதிப்பேன்,” என்று மனம் தளராமல் கூறி வந்த பாபுவின் உடல்நிலை அண்மையில் மோசமடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் அவர் காலமானார். எண்பது வயதைக் கடந்துவிட்ட அவரது தாயார்தான் இதுநாள் வரை பாபுவுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
பாபுவை விதி வீழ்த்தி படுக்கையில் தள்ளியபோதும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. எனினும் கனவு நிறைவேறாமலேயே தனது போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டுள்ளார்,” என்று திரையுலகத்தினர் கூறுகின்றனர்.

