‘சித்தா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள புதுப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சித்தார்த். இதை தனது கனவுப் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கி உள்ள அருண்தான் ‘சித்தா’ படத்தை இயக்கி உள்ளார்.
கதாநாயகன் சித்தார்த் என்பதால் அவரது பெயரில் பாதியை இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனரோ என்று பலரும் கேட்கிறார்களாம். அது காரணமல்ல என படக்குழு மறுத்துள்ளது.
‘‘என்னுடைய நண்பரான விஜய் சேதுபதியும் இதையேதான் கேட்டார். காரணம் விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என மூன்று படங்களை இயக்கியுள்ளார் அருண்.
“அவற்றுள் ‘சேதுபதி’ என்று அவருடைய பெயரில் பாதியை ஒரு படத்துக்குத் தலைப்பாக்கி உள்ளார். அந்த வழக்கத்தைப் பின்பற்றி ‘சித்தா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதா என்று சேதுபதி வேடிக்கையாகக் கேட்டார்.
“இந்தப் படத்துக்கு முதலில் வேறு ஒரு பெயரைத்தான் சூட்டியிருந்தோம். ஒரு சிறுமிக்கும் அவளுடைய சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கதைப்படி அந்தக் குழந்தை சித்தப்பாவை ‘சித்தா’ என்றுதான் கூப்பிடும். அதையே படத்துக்குப் பெயராக வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
“காரணம், உறவுமுறைகளைச் செல்லமாக அழைப்பது போன்ற பெயர்களுக்கு ஒரு பலம் இருக்கும். அது படம் பார்த்து முடித்த பிறகும் ரசிகர்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதினோம்.
“இந்தப் படம் வெளியான பிறகு குழந்தைகள் எல்லாரும் சித்தப்பாவை ‘சித்தா’ என்றுதான் அழைப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் சித்தார்த்.
இவர் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகளாகிவிட்டன. ஒரு படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறதோ, இறுதி வரை அந்த நோக்கம் நீடிக்க வேண்டும் என்றும் அதுதான் தனது கனவுப் படமாக இருக்கும் என்றும் கருதினாராம்.
தொடர்புடைய செய்திகள்
தனது கனவை ‘சித்தா’ படம் நிறைவேற்றி உள்ளதாகச் சொல்கிறார். மேலும், தனது கனவுப் படத்தை தாமே தயாரித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும்தான் தனது குருக்கள் என்று குறிப்பிடும் சித்தார்த், இருவரிடமும் தாம் திரையுலகம் தொடர்பான பல்வேறு நுணுக்கங் களைக் கற்றுத் தேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்.
‘சித்தா’ படத்தில் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நிமிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் நடிப்பது இனிய அனுபவங்களைத் தந்துள்ளதாகச் சொல்கிறார் சித்தார்த்.
“கமல் என்ற நடிகரின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. அவருடன் இணைந்து நடிப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது.
“பல ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியன்’ படத்தை சென்னையில் உள்ள திறந்தவெளி திரையரங்கில் தரையில் படுத்தபடி பார்த்து ரசித்தேன். இப்போது அதன் இரண்டாம் பாகத்தில் நானும் இணைந்துள்ளேன் என்பதை நினைத்தால் ஏதோ கனவுபோல் தோன்றுகிறது,” என்கிறார் சித்தார்த்.
படம் இயக்க வேண்டும் என்பதும் இவரது கனவுகளில் ஒன்று. அதற்கான முயற்சிகளை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்கிறார்.
“ஆனால் அறிவிப்பு வெளியானதும் இயக்குநருக்கான பணிகளில் முழுமையாக ஈடுபடுவேன். அந்த அறிவிப்புக்காகக் காத்திருங்கள்,” என்று சித்தார்த் பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

