மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயிலிருந்து குணம்பெறுவதற்காக தொடர் சிகிச்சை பெற்றுவரும் நடிகை சமந்தா, சமூக ஊடக நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
சமந்தா கூறும்போது, “எனது சருமம் உங்களில் பலரும் நினைப்பதுபோல் மினுமினுப்பானதன்று. சருமப் பூச்சுகளும் முக அலங்காரமும் என்னை இதுபோல் அழகாகக் காட்டுகின்றன. மயோசிடிஸ் சிகிச்சையின்போது நிறைய ஸ்டெராய்ட்ஸ் ஊக்க மருந்துகள் எடுத்துக்கொண்டதால் சருமப் பிரச்சினைகள் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டேன். இருந்தாலும் இதுவும் கடந்துபோகும், பொன்னான காலம் மலரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.
“இனி வரும் காலங்களில் கதைத் தேர்வில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளேன். எந்தக் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்கமுடியும் என என் உள் மனது சொல்கிறதோ, அந்தக் கதைகளில் மட்டுமே நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். அதேபோல், அதிரடி காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களிலும் நடிப்பதற்கு விருப்பம் உள்ளது. சிட்டாடலில் அதிரடி காட்சிகளைப் பார்க்கலாம்.
“வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் திணறும் இளைஞர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எந்த ஒரு தருணத்திலும் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து போகாதீர்கள்.
“சிரமங்கள், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சில நேரங்களில் அவையே நம்மை திடமாக மாற்றும்.
“என் வாழ்க்கையே நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 25 வயதில் நான் இந்த நிலைமையில் இருப்பேன் என்றோ, இத்தனை பிரச்சினைகளை என்னால் சமாளிக்க முடியும் என்றோ நான் அறவே நினைக்கவில்லை. எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு சமாளித்து முன்னேறவேண்டும்,’’ என்று இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார் சமந்தா.
‘சவாலான காலங்களில் உதவியை நாடுங்கள்’
சமந்தாவைப் போலவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கஷ்டத்தை ஒப்புக்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு ஆதரவைத் தேடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பேசும்பொருள் ஆனது.
தொடர்புடைய செய்திகள்
நம் அன்றாட வாழ்க்கையிலும் நம் குடும்பம், நட்பு வட்டாரம் என நம்மைச் சுற்றியுள்ள பலரும் பல்வேறுவிதமான மனவேதனைகளை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை நம்பிக்கையற்ற பாதையில் தள்ளலாம். அந்த இருள் சூழ்ந்த தருணத்தில், அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை, அழகான எதிர்காலத்திற்குத் தாங்களும் தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.
நமது வலிமை, தைரியத்தை சோதிக்கும் இத்தகைய சவாலான காலங்களில் உதவியை நாடுமாறு மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன். சிரமமான சூழலை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு நல்ல ஒரு ஆதரவை தேடுவது மிகவும் துணிவான செயலாகும்.
சில மோசமான தருணங்களில் எனக்கான உத்வேகத்தை தேடுவதற்கும் நான் சிரமப்பட்டுள்ளேன். ஆனால், நீங்கள் வெளிப்படையாக பேச முயன்றால், உங்களைக் கவனிப்பதற்கும் உங்களுக்கு உதவி செய்வதற்கும் சமூகத்தில் பலர் ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என யுவன் சங்கர் ராஜா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

