திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக ‘ரத்தம்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகச் சொல்கிறார் நந்திதா ஸ்வேதா.
இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி, மூத்த நடிகர் நிழல்கள் ரவி, இயக்குநர் ரவி உள்ளிட்டோர் தமக்குப் பல்வேறு வகைகளில் ஊக்கம் அளித்து சிறப்பாக நடிக்க வைத்ததாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் படத்தில் ஊடகத்துறை சார்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதில் சுவாரசியம் என்னவென்றால், எனக்கான காட்சிகள் அனைத்துமே கதைப்படி நான் பணியாற்றும் அலுவலகத்தில்தான் படமாக்கப்பட்டன.
“சரியாகச் சொல்வதானால் ஒருமாதம் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அந்த முப்பது நாள்களுமே அந்த அலுவலகம் போன்ற அரங்கில், எனக்கான அறையில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது.
“இதனால் உண்மையாகவே நான் ஓர் அலுவலகத்துக்கு தினமும் சென்று வேலை பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. எந்தப் படத்திலும் நான் இவ்வாறு நடித்ததில்லை.
“பார்ப்பதற்கு மிக அழகான, கண்ணைக் கவரக்கூடிய வகையில் அரங்குகளை அமைத்திருந்தனர். இயக்குநர் சி.எஸ்.அமுதோனைப் பொறுத்தவரையில் எதையும் முன்கூட்டியே கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தக் கூடியவர்.
“உண்மையாகவே ஓர் ஊடக அலுவலகம் எப்படி இருக்குமோ அதுபோன்ற அரங்கைதான் அவர் அமைத்திருந்தார். ஊழியர்களின் பதவி, பொறுப்புகளுக்கு ஏற்ப தனித்தனி சிறு அறைகள், பெரிய திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நேரலை, செய்தித்தொகுப்பு, பொழுதுபோக்கு காணொளிகள் என்று சூழ்நிலை பரபரப்பாக இருக்கும்.
“தினமும் காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்பும் பெண்ணின் மனநிலையில்தான் நான் இருந்தேன். படப்பிடிப்பு முடிந்த பின்னர் அந்த அலுவலக அரங்கு பிரித்தெடுக்கப்படுவதாக அறிந்தபோது சோகமாகிவிட்டேன். என் வாழ்வின் ஓர் அங்கத்தை என்னிடம் இருந்து பிரித்துவிட்டதுபோல் உணர்ந்தேன்,” என்கிறார் நந்திதா ஸ்வேதா.
தொடர்புடைய செய்திகள்
படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளன்று தனது கதாபாத்திரத்திற்கான நடிப்பு குறித்து இயக்குநர் தரப்பில் இருந்து ஏதாவது குறிப்புகள் வரும் என எதிர்பார்த்தாராம். குறைந்தபட்சம் இயக்குநர் அமுதோன் அறிவுரை வழங்குவார் என்று நினைத்தாராம்.
“ஆனால் இயக்குநரோ, ‘உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை மட்டும் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டார். அது மட்டுமல்ல, முதல் நாளன்று எடுக்கப்பட்ட முதல் காட்சியிலேயே நான் நீளமான வசனத்தைப் பேச வேண்டியிருந்தது.
“முதலில் தயங்கினாலும், பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அக்காட்சியில் நடித்தேன். நான் வசனத்தைப் பேசி முடித்ததும், என்னுடன் இணைந்து நடித்த மூத்த நடிகர் நிழல்கள் ரவி கைதட்டிப் பாராட்டினார்.
“இவ்வளவு எளிதாக உங்களுக்கான கதாபாத்திரத்துக்குள் உணர்வுரீதியாக நுழைந்துவிட்டீர்கள். இவ்வாறு வசனத்தையும் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிப்பது பெரிய விஷயம் என்று அவர் கூறியபோது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது,” என்று சொல்லும் நந்திதா ஸ்வேதா, மூத்த கலைஞர்களின் பாராட்டும் வாழ்த்தும் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் என்கிறார்.
படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவேளைகளில் நாயகன் விஜய் ஆண்டனி, நிழல்கள் ரவி இயக்குநர் அமுதன் என அனைவரும் வட்டமாக அமர்ந்து அரட்டை அடிப்பார்களாம். சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியிலும் பல்வேறு சம்பவங்கள், தருணங்களைப் பகிர்ந்து, சிரித்து மகிழ்ந்ததாகச் சொல்கிறார்.
“விஜய் ஆண்டனி மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அதிகமாகப் பேசமாட்டார். ஆனால் பேசத் தொடங்கிவிட்டால் சுவாரசியமாக இருக்கும்.
“நானும் அவரும் கடந்த 2012ஆம் ஆண்டில்தான் திரையுலகம் அறிமுகமானோம். அவர் ‘நான்’ படத்துக்கு இசையமைக்க, நான் ‘அட்டகத்தி’ படத்தில் அறிமுகமானேன். இதை அவர் நினைவுபடுத்தி பேசியபோது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு நான் நடித்த சில படங்கள் குறித்தும் பேசினார்.
“முன்னணி நடிகர், இசையமைப்பாளராக வளர்ந்துவிட்ட போதிலும், உடன் நடிப்பவர்கள் குறித்து அவர் அறிந்து வைத்திருப்பதும் மனதாரப் பாராட்டுவதும் பெரிய விஷயம் என்பேன்,” என்கிறார் நந்திதா ஸ்வேதா.

