மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நடிகர் ரோபோ சங்கர், அண்மையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரது ஆசியைப் பெற்றுள்ளார்.
சென்னையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக உருவெடுத்து வந்த ரோபோ சங்கர், திடீரென உடல்நல பாதிப்பால் முடங்கிப் போனார்.
அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக குடும்பத்தார் தெரிவித்தனர். இதனால் பொது நிகழ்ச்சிகளிலும் படப்பிடிப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ரோபோ சங்கரின் உடல்நிலை தேறி வருகிறது. அண்மையில் ‘பார்ட்னர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் அவ்வப்போது தொலைபேசி மூலம் விசாரித்து வந்துள்ளார்.
நோய் பாதிப்பில் இருந்து மீள வேண்டும் எனில் கவனமாக இருக்க வேண்டும், நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், உடல்நலம் முன்னேறி வரும் ரோபோ சங்கர், தனது மனைவி, மகளுடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

