பல்வேறு தடைகளைக் கடந்து ஒருவழியாக வெளியீடு காண உள்ளது ‘துருவ நட்சத்திரம்’ படம்.
விக்ரம் நடித்துள்ள இந்தப் படம் நவம்பர் 24ஆம் தேதி திரைகாண உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் பூசை போட்ட நாள்முதல் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதில் ரீது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் படத்துடன் தொடர்புள்ள சிக்கல்கள்தான் முடிவுக்கு வரவில்லை.
இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியாமல் தயாரிப்புத் தரப்பு தவிப்புக்கு ஆளானது. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும், படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டதை அடுத்து புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
மேலும், படத்தின் சுவரொட்டி, அறிமுக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

