‘இது எளிமையான மகாராஜாவின் கதை’

‘இது எளிமையான மகாராஜாவின் கதை’

3 mins read
4e2c4d1e-dbbd-44f7-90a5-e1d37395da90
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

வழக்கம்போல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் `மகாராஜா’.

படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி மனதைக் கவரும் வகையில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். .

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்குகிறார். இதற்கு முன்பு ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை நேர்த்தியாகப் படம்பிடித்து திரையில் கதை சொன்னவர் நித்திலன்.

பெரிய கவலையோ, மனப்பாரமோ இல்லாமல் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையில் திடீரென ஒரு விபத்து நடக்கிறது. அதற்கான காரணத்தைத் தேடி அலையும்போது அவன் தன்னை வேறொரு கோணத்தில் கண்டடைவதுதான் ‘மகாராஜா’வின் கதை என்கிறார்.

“இந்தப் படத்தில் சேது அண்ணனின் பெயர்தான் மகாராஜா. சிகையலங்காரம் செய்யும் தொழிலாளியாக நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார் எனலாம்.

“ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும்போது அவர் நடந்து வரும் விதத்தைப் பார்க்க வேண்டும். ஓர் எளிய மனிதனுக்குரிய அனைத்து அம்சங்களையும் அந்த நடையில் பார்க்க முடியும்.

“இன்றைய தேதியில் ஒரு கதாநாயகனை நம்ப முடியாத வகையில் திரையில் காட்டுகிறார்கள். ஆனால், சேது அண்ணன் அதையெல்லாம் விரும்புவதே இல்லை என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. அவரை அருகில் இருந்து பார்க்கும்போது இன்னும் அழகாகத் தெரிகிறது.

“தனக்குள் இருக்கும் திறமையைக் கொண்டாடாத மனிதர். அவரைச் சந்திக்கவும் படம் எடுக்கவும் தகுதி வேண்டும். திரையுலகில் மிகக் கடினமான பயணத்தை மேற்கொண்டு இன்றுள்ள நிலையை எட்டிப்பிடித்த கலைஞனை சும்மா போய்ப் பார்த்து, திரைப்படத்தை எடுத்துவிட முடியாது,” என்று தனது கதாநாயகனுக்குப் பெரிய புகழ் மாலை சூடுகிறார் இயக்குநர் நித்திலன்.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகிறது ‘மகாராஜா’. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நன்கு உணர்ந்துள்ளதாக இயக்குநர் தரப்பு கூறுகிறது.

“நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நமக்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கலாம், சமயங்களில் வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதாகவும் இருக்கலாம்.

“எதிர்பாராத விதத்தில் நமக்கு ஒரு நல்லதோ கெட்டதோ நடக்கும்போது, அதற்கான காரணத்தை நாம் முழுமையாக உணர்ந்திருக்க மாட்டோம். நாம் இதுவரை அறிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும்தான் உலகம் என்ற முடிவில் இருப்போம். ஆனால் உண்மை நிலவரம் அதுவன்று.

“நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கையை வேறு சில அம்சங்களும் கட்டுப்படுத்த முடியும். இந்த உண்மையை உணரும்போது ஒருவித அதிர்ச்சி ஏற்படும்.

“அந்தக் கணம் நம்மை வேறு திசைக்கு, பாதைக்கு இழுத்திட்டுப் போய்விடும். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நான் சொல்வதை உணர்வீர்கள்,” என்கிறார் நித்திலன்.

தனியார் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ என்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற பின்னர் விஜய் சேதுபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டாராம். தாம் யார் என்று அதிகம் தெரியாதபோதே, தம்மை மதித்து கதை கேட்டதாகச் சொல்கிறார்.

“பிறகு நேரில் சந்தி்த்தபோது வேறொரு கதையைச் சொன்னேன். அவற்றுள் ‘மகாராஜா’ கதை அவருக்குப் பிடித்திருந்தது. எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வரிசையாகப் படங்கள் உள்ளன. ஆனால் நீ முயற்சி செய்துகொண்டே இரு. வாய்ப்பு அமையும்போது இணைந்து பணியாற்றலாம் என்றார். அது இப்போது அமைந்துள்ளது,” என்கிறார் நித்திலன்.

குறிப்புச் சொற்கள்