லாரன்ஸ்: ரசிகர்களால் உண்மையான சந்திரமுகியை திரையில் பார்க்க முடியும்

2 mins read
4c878021-21ab-4433-a918-8ced296bdb99
ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத். - படம்: ஊடகம்

‘சந்திரமுகி’ முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

படத்தின் தலைப்பு மட்டுமே ஒன்றாக இருக்கும் என்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் பாகத்தில் ஜோதிகா தம்மை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இரண்டாம் பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

“வேட்டையன் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை சிறு ரகசியம் உள்ளது. ரஜினி நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு நடிக்கவும் வராது.

“ரஜினியின் நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி என்றால் அது அவர் மட்டும்தான். இதை உணர்ந்துதான் நடித்துள்ளேன்.

“அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ பட வடிவேலுவுக்கும் ‘சந்திரமுகி’ வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு அழுதால் நமக்கு அழுகை வரும். சந்திரமுகியில் வடிவேலு அழுதால் நமக்கு சிரிப்பு வரும்,” என்று கூறியுள்ளார் லாரன்ஸ்.

‘சந்திரமுகி 2’ படத்தில் இவர் நாயகனாகவும் கங்கனா ரணவத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது ‘சந்திரமுகி 2’

இதையடுத்து படத்துக்கான விளம்பரப் பணிகள் வேகமெடுத்துள்ளன. இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் என்கிறார் இயக்குநர் பி.வாசு.

குறிப்புச் சொற்கள்