பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் உள்ளிட்ட சிலரிடம் மட்டும் சொந்த ஜெட் விமானம் உள்ள நிலையில், இப்போது அவர்களின் பட்டியலில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.
இதன்மூலம் தென்னிந்திய திரைத்துறையில் தனியார் ஜெட் விமானத்தை வைத்துள்ள ஒரே நடிகையாக நயன்தாரா புகழப்படுகிறார்.
இந்த விமானத்தில் இருந்து நயன்தாரா தம்பதி இறங்கி வெளியே வரும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளிவந்துள்ளன.
கோலிவுட்டில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஒரு முன்னணி நடிகையாக, செல்வ சீமாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு பலரையும் கிறுகிறுக்க வைப்பதாக விவரம் அறிந்தோர் கூறுகின்றனர்.
இவர் தனது அசரவைக்கும் நடிப்பையும் தாண்டி பல வழிகளிலும் பணம் சம்பாதித்து வருகிறார். அதனாலேயே பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு இணையான அந்தஸ்துடன் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாக அவர் இருந்து வருகிறார்.
நயன்தாராவிடம் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள வீடுகள், விலையுயர்ந்த கார்கள், தனியார் ஜெட் விமானம் உள்ளது என்றும் இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், இவர் பல தொழில்களிலும் கால்பதித்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் நயன்தாராவுக்கு சென்னை, மும்பை உட்பட பல முக்கிய நகரங்களிலும் சொகுசு வீடுகள் உள்ளன.
தற்சமயம் கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் நான்கு படுக்கை அறைகள் கொண்ட ரூ.100 கோடி மதிப்பிலான வீட்டில் நயன்தாரா வசித்து வருகிறார். இவ்வீட்டில் பிரத்தியேகமான திரையரங்கு, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளதாம்.
மேலும் ஹைதராபாத்தில் இவருக்குச் சொந்தமாக ரூ.60 கோடிக்கு மேல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், பிஎம்டபிள்யூ7 மற்றும் 5 சீரிஸ் உட்பட பல சொகுசு கார்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்த நயனுக்குச் சொந்தமாக வெள்ளை-நீல நிறத்திலான 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமும் உள்ளது.
அந்த விமானத்தின் உட்பக்கங்கள் சாய்க்கக்கூடிய, மசாஜ் வசதிகள் கொண்ட சொகுசு வசதிகளுடன் காட்சியளிக்கிறது. கழிவறை, ஓய்வெடுப்பதற்கான படுக்கை அறையும் உள்ளது.
அத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து ‘லிப் பாம்’ நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேலும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளும் இவர் வசம் உள்ளதாம்.
இவை தவிர ‘ரவுடி பிக்சர்ஸ்’, ‘ஸ்கின் கேர்’ நிறுவனம் என பல வழிகளில் இவர் கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார்.
இப்படி தன்னுடைய சொத்தை பல மடங்காக பெருக்கி பலரையும் தலைசுற்ற வைத்துள்ளார் நயன்தாரா.
இதனிடையே, ‘பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் “மண்ணாங்கட்டி” என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ நாடகத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ரவிச்சந்திரனும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘மண்ணாங்கட்டி’ என்று திரைப்படத்திற்கு பெயர் வைத்திருப்பதால் பலர் இந்த திரைப்படம் எப்படி இருக்கப் போகுதோ எனத் தெரியவில்லை? இதுவும் கோலமாவு கோகிலா போல இருக்குமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.