பொதுவாக பெரிய, முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்களின் விளம்பர நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். அதிலும் குறிப்பாக, விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட உலகமும் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நாளை (செப்டம்பர் 30) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாகக் கொண்டாட காத்துக் கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளின் அழுத்தம், செல்வாக்கு காரணமாகத்தான் ‘லியோ’ படத்தின் இசை நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத் தயாரிப்பாளர் லலித் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூட்டம் நிரம்பி வழியும் என்பதாலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் இருக்கும் என்பதாலும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக பதிவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ‘லியோ’ படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், “லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியைக் காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.
“எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள், ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல,” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகப் போனாலும் விரைவில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக படத்தின் டிரைலர், புதிய தகவல்கள் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
செங்கல்பட்டு விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ’ஆடியோ லான்ச் இல்லைனா என்ன.. ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு .. என்ன நண்பா’ என்ற வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சத்துபானமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.