அபர்ணதி: உடல் பெருக்க பெரிதும் போராடினேன்

3 mins read
a8ce28ca-1c1e-42de-9f98-24191011bc6f
அபர்ணதி. - படம்: ஊடகம்

“தமிழ்த் திரையுலகில் மேலும் ஒரு திறமை வாய்ந்த நடிகையாக உருவாகி வருகிறார் அபர்ணதி. அவரது நடிப்பு மிக இயல்பாக உள்ளது,” என்று பாராட்டுகிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

‘தேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணதி. அதன் பின்னர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுகப்பற்று’ படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்காக உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டாராம். பல போராட்டங்களுக்கு மத்தியில் உடல் பெருத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கியதும் மேலும் சில நல்ல வாய்ப்புகள் தேடிவந்துள்ளன. உடல் எடை அதிகரித்ததால் அவற்றை ஏற்க முடியாமல் போய்விட்டதாம்.

“எனக்கான கதாபாத்திரத்துக்கு நான் சற்றே உடல் பருமனாக திரையில் காட்சி அளிக்க வேண்டும் என்றார் இயக்குநர் யுவராஜ். இதற்காக மூன்று மாதங்கள் அவகாசமும் அளித்தார்.

“அவர் விவரித்த கதை பிடித்துப்போனதால் இந்தப் பட வாய்ப்பை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று நானும் முனைப்பாக இருந்தேன். ஆனால் மூன்று மாதங்களுக்குள் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் உடல் எடையைக் கூட்ட முடியவில்லை.

“ஒரு கட்டத்தில் என்னை ஒப்பந்தம் செய்ய இயலாது என்ற முடிவுக்கு இயக்குநர் யுவராஜ் வந்துவிட்டார். அந்தச் சமயத்தில்தான் விதார்த் என்ற உணவியல் நிபுணரின் (டயடீஷியன்) அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகே ஒரே மாதத்தில் என் தோற்றம் மாறியது. விதார்த் இல்லையென்றால் இந்தப் படத்தில் என்னால் நடித்திருக்க முடியாது,” என்கிறார் அபர்ணதி.

உடல் எடையை அதிகரிக்க பல்வேறு உணவு வகைகள், நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுத் தீர்த்தாராம். இதற்காக நிறைய செலவிட வேண்டியிருந்ததாம்.

“உடல் எடையை நினைத்த உடனேயே அதிகரிக்கவும் குறைக்கவும் நான் என்ன சூர்யாவா, விக்ரமா என்றுகூட கோபப்பட்டேன். பிறகு இதை ஒரு சவாலாகக் கருதி உழைத்தேன்.

“ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகாலம் இந்தப் படமும் எனக்கான கதாபாத்திரமும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. எனினும், அதன் முடிவில் இதுபோன்ற படத்தில் நடித்ததைப் பெருமையாக உணர்கிறேன்.

“இந்தப் படம் நிச்சயமாக எனது திரைப் பயணத்தின் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சில விளம்பரப் படங்களிலும் தனியிசைத் தொகுப்புகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவந்தன. அவற்றை ஏற்க முமடியாமல் போனது,” என்கிறார் அபர்ணதி.

‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோ’ என்ற நிறுவனம் ‘இறுகப்பற்று’ படத்தை தயாரித்துள்ளது. இயக்குநர் யுவராஜ் ஏற்கெனவே வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் அக்டோபர் 6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.

இதையடுத்து இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து இப்படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கணவன், மனைவி இடையேயான பிரச்சினைகள் பெரிதாகிவிட்டது என்றும் இருவருக்குமே அது நரக வேதனையாக அமைந்துவிடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அந்தச் சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் ‘இறுகப்பற்று’ என்றும் ஆண், பெண் இருவரில் யார் பெரியவர் என்ற மனப்போக்கே சிக்கலுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் இப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன். நிறைய இடங்களில் கண்கலங்கினேன்,” என்றார் கார்த்திக் நேத்தா.

தாம் முன்பு இயக்கிய இரண்டு படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை என்றும் இதைப் பொருட்படுத்தாமல் தயாரிப்பாளர் தமக்கு வாய்ப்பு அளித்துள்ளார் என்றும் இயக்குநர் யுவராஜ் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பேசுகையில், அவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே குலுங்கி அழுதார். அவரைப் படக்குழுவினர் தேற்றினர்.

நடிகை ஷ்ரத்தா பேசும்போது, இயக்குநர் இப்படத்துக்கான கதையை தம்மிடம் நான்கு மணி நேரம் முழு ஈடுபாட்டுடன் விவரித்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்