‘இந்த கிரைம் தப்பில்ல’: தாமதப்படும் நீதி வெறும் அநீதி என்பதை விவரிக்கும் படைப்பு

‘இந்த கிரைம் தப்பில்ல’: தாமதப்படும் நீதி வெறும் அநீதி என்பதை விவரிக்கும் படைப்பு

2 mins read
34fcefdc-36c6-4536-9bbe-c4e09382c396
‘இந்த கிரைம் தப்பில்ல’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘இந்த கிரைம் தப்பில்ல’ என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் உருவாகும் புதுப் படத்தை இயக்கி வருகிறார் தேவகுமார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சிக்னல்’ படத்தை இயக்கியுள்ள இவருக்கு, அடுத்த வாய்ப்பை தமிழ்த் திரையுலகம் தந்துள்ளது.

பல்வேறு கடுமையான சட்டங்கள், தண்டனைகள், போக்சோ நீதிமன்றங்கள் என்று இருந்தாலும் இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்கிறார் தேவகுமார்.

“இது தொடர்பான குற்றவுணர்வைப் பொதுச் சமூகத்துக்கு உருவாக்கும் விதமாகத் தற்போது பல திரைப்படங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் ‘கார்கி’ தொடங்கி அண்மையில் வெளிவந்துள்ள ‘சித்தா’ வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டியது முதல் தேவையா அல்லது அவர்களை உளவியல் ரீதியாக மீட்டெடுப்பது முதல் தேவையா என்கிற விவாதத்தை உருவாக்கி உள்ளன.

“இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்தால் என்ன நடக்கும் என்பதை மையப்படுத்தித் திரைக்கதை அமைத்துள்ளோம். ஒருகுழுவாக அவர்கள் செய்யும் குற்றம் தவறில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது,” என விளக்கம் அளித்துள்ளார் தேவகுமார்.

வெவ்வேறு ஊர்களில் நடக்கும் மூன்று பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர்கள் இரண்டு பேர், ஒரு சகோதரி ஆகியோர் எதிர்பாராமல் ஒரு குழுவாக ஒன்றிணைகிறார்கள். குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற ஒரு கூட்டம் எல்லா வகையிலும் சட்டத்தை வளைப்பதால் நீதி நீண்ட உறக்கத்தில் ஆழ்கிறது.

நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீதி, தாமதமான அநீதியாக மாறும்போது பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்கிறார்கள். அதை மேம்போக்காகக் காட்டாமல் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்கும்படி உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் காட்சிகளை அமைத்திருப்பதாக இப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

படத்தில் தேவையற்ற வன்முறை, ஆபாசக் காட்சிகள் இருக்காது என்று இப்போதே உத்தரவாதம் அளிப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் தேவகுமார்.

குறிப்புச் சொற்கள்