‘சினிமாவை நேசிக்கிறேன்’

2 mins read
83bfb36e-c42b-4728-b88a-ddb0badc988b
நிமிஷா. - படம்: ஊடகம்

திரைத்துறையில் தாம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறார் நிமிஷா சஜயன்.

சித்தார்த் நாயகனாக நடித்துள்ள ‘சித்தா’ படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமாகி உள்ளார்.

மாறுபட்ட, கனமான கதாபாத்திரம் என்றால் மலையாள இயக்குநர்களின் முதல் தேர்வாக நிமிஷாதான் இருக்கிறார்.

‘நயாட்டு’ படத்தில் தொடங்கி இதுநாள் வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.

“நான் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். எனினும், திரையில் தோன்றும்போது கேரளாவில் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் பெண்ணாக மாறுவது எப்படி என்று பலர் வியப்புடன் கேட்கிறார்கள்.

“அதற்கு, ‘நான் சினிமாவை வெகுவாக நேசிக்கிறேன்’ என்பதுதான் பதில்.

“இயக்குநர் உச்சரிக்கும் ‘ஆக்‌ஷன்’, ‘கட்’ ஆகிய இரு வார்த்தைகளுக்கு இடையே நான் என்னையே மறந்து போகிறேன். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறி, எனக்கான வசனங்களை செயற்கைத்தனம் இன்றி பேசுகிறேன்.

“என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. நான் மட்டும் சிறப்பாக நடித்தால் போதாது. உடன் இணைந்து நடிப்பவர்கள், இயக்குநர் சொல்லிக் கொடுப்பவை, நான் அணியும் உடைகள், எனக்கான ஒப்பனை என அனைத்துமே ரசிகர்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே வெற்றியும் பாராட்டும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

“எனவே, எனக்கான பாராட்டுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் உரித்தானது,” என்கிறார் நிமிஷா.

சினிமாவில் நடிக்கும்போது வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடிவதாகக் குறிப்பிடுபவர், இந்தப் பணி அளிக்கும் மகிழ்ச்சியை இதுவரை வேறு எதுவும் தந்ததில்லை என்கிறார்.

“உண்மையைச் சொல்வதானால், நடிப்பு என்பதை பொழுதுபோக்காகவே அணுகி வருகிறேன். அதை என்னுடைய தொழிலாகவோ பணியாகவோ கருதவில்லை.

“பொழுதுபோக்கு என்பது எப்போதுமே போரடிக்காத ஒன்று. எனக்கு கேமரா முன் நின்று நடிப்பதுதான் ஆகப்பிடித்தமான பொழுதுபோக்கு,” என்று குறிப்பிடும் நிமிஷா, அழகை வைத்து நடிகைகளை எடைபோட்ட காலம் மலையேறி விட்டது என்கிறார்.

“இன்றைய நவீன வாழ்க்கை முறையும் சமூக ஊடகங்களின் ஆதிக்கமும் ஒவ்வொரு பெண்ணையும் அழகில் கவனம் செலுத்த தூண்டுகிறது. ஆனால், ரசிகர்களோ இப்போதெல்லாம் திறமைக்குத்தான் மதிப்பு அளிக்கிறார்கள்.

“இத்தகைய போக்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறமைதான் முக்கியம் என்பதே இளையர்களுக்கு எனது அறிவுரை,” என்கிறார் நிமிஷா.

இதுவரை அழுத்தமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், இனி நகைச்சுவை, பொழுதுபோக்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறார். தமிழில் அடுத்து, ‘ஜிகிர்தண்டா-2’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் நிமிஷா.

குறிப்புச் சொற்கள்