சமூக ஊடகங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சொல்கிறார் நடிகை தீபா வெங்கட்.
முன்பு சின்னத்திரையிலும் திரையுலகிலும் நடிகையாக வலம் வந்த இவர், தற்போது பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக உள்ளார்.
சிம்ரன், நயன்தாரா, ஐஸ்வர்யாராய் என பல முன்னணி நடிகைகளுக்கு இரவல் குரல் கொடுப்பது இவர்தான். குறிப்பாக நயன்தாராவுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ‘யூடியூப்’பில் பல்வேறு பொய்யான தகவல்கள் இடம்பெறுவதாக சாடுகிறார் தீபா.
“பல ‘யூடியூப்’ சேனல்கள் அதிகமானோர் தங்களுடைய காணொளிகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பொய்த் தகவல்களை வெளியிடுகின்றன. இது அறவே நியாயமற்ற செயல்.
“கொரோனா சமயத்தில் நான் தொற்றுபாதிப்பால் இறந்துவிட்டேன் என்றுகூட செய்தி வெளியிட்டனர்.
“இச்செய்தியைப் பார்த்து என் பெற்றோரும் உறவினர்களும் மிகவும் வருந்தினர். இவ்வாறு செய்யக்கூடாது,” என்று தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.

