தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அவமானங்களைச் சந்தித்தேன்’

2 mins read
6cc54def-1bf0-4627-9870-f2f99a10fd69
எஸ்.ஜே. சூர்யா. - படம்: ஊடகம்

தனது முழுத் திறமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அவ்வாறு நடக்கும்போது தமது நடிப்புத்திறமை மேலும் பலரால் பாராட்டப்படும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘மார்க் ஆண்டனி’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளிக்குவித்துள்ள இவர், தொடக்கத்தில் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு தம்மால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகு சூர்யாவுக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கதையை மாற்றி எழுதியுள்ளார்.

“முதலில் விஷால் மட்டுமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக இருந்தது. நான் வயதான வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆதிக் கேட்டுக் கொண்டார். ஆனால், கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே என்னால் நடிக்க இயலாது என்று தெளிவாகக் கூறிவிட்டேன்.

“இப்படம் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து வயதான வில்லனாகத்தான் நடிக்க அழைப்பார்கள் என்று பயந்தேன். இதைப் புரிந்துகொண்டு ஆதிக் கதையை மாற்றி எழுதினார்.

“அவர் அதை விவரித்தபோது அசந்து போனேன். உண்மையில் அனைத்து பாராட்டுகளும் அவரைத்தான் போய்ச்சேர வேண்டும்,” என்று சொல்லும் சூர்யா, இயக்குநர் பணியில் கூடுதல் கவனம் செலுத்தாமல், தாம் நடிக்கத் தொடங்கியபோது யாரும் தனக்கு ஊக்கம் அளிக்கவில்லை என்கிறார்.

அவரது உதவி இயக்குநர்களும்கூட கேலி செய்தனராம். அவரைப் போலவே நடித்துக் காண்பித்து, தங்களுக்குள் விமர்சித்துக் கொள்வார்களாம்.

“எத்தனையோ அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அதற்காக வருத்தப்படவில்லை. எனக்கென ஒரு நடிப்புப் பாணியை உருவாக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.

“அதன் பலனாகத்தான் இத்தகைய உயரத்தை எட்ட முடிந்தது. கடவுளின் கருணையால் ஒரு நடிகனாக எனக்கு நல்ல கதாபாத்திரங்களும் கதைக்களங்களும் தொடர்ந்து அமைந்து வருகின்றன.

“திறமையான நடிகரால் 60 வயதிலும் கல்லூரி மாணவராக நடிக்க இயலும். ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எனக்கும் முக்கித்துவம் அளித்த விஷாலையும் அவருடனான நட்பையும் பெரிதும் மதிக்கிறேன்.

விஷாலும் நானும் மணிக்கணக்கில் பேசிக்கொள்வோம். அதிகாலை இரண்டு மணிக்கும்கூட என்னுடன் பேசத் தயாராக இருக்கும் நண்பர் அவர்.

“திரைப்படங்களில் அதிரடி கதாநாயகனாக காட்சியளிக்கும் அவர் உண்மையில் குழந்தை மனம் படைத்தவர். அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்ய விரும்பும் நல்ல மனிதர்,” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

குறிப்புச் சொற்கள்