‘சீரன்’: இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை

‘சீரன்’: இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை

2 mins read
4487a452-203c-4f33-b1eb-5f3274fe4e80
இனியா. - படம்: ஊடகம்

‘சீரன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தை இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் துரை கே.முருகன். இவர் இயக்குநர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

சீரன் என்றால் சிறப்பானவன், சீர்படுத்துபவன் என பொருள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இனியா நாயகியாக நடிக்க, படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் தான் நாயகனாகவும் நடிக்கிறார்.

குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை ஊர் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். அந்தக் குடும்பம் உலகமே வியக்குமளவுக்கு சாதனை படைக்கிறது. அந்தக் குடும்பத்தை ஊர் ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதைச் சுருக்கமாம்.

இனியா கதாநாயகியாக நடிக்கிறார்.

“இனியா நடித்தால் கதைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கதையை எழுதும்போதே மனதில் தோன்றியது. ‘வாகைசூடவா’, ‘மெளன குரு’ போன்ற தரமான படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

“அனுபவம் வாய்ந்த கதாநாயகி நடிக்கும்போது ஒரு வலுவான கதாபாத்திரம் மேலும் வலிமை பெறுகிறது. இந்த அடிப்படையில்தான் அவரை நேரில் சந்தித்து கதையை விவரித்தேன்.

“முழுக் கதையையும் விவரித்து முடிக்கும் வரை யார் கதாநாயகன் என்று அவர் கேட்கவே இல்லை. கதை பிடித்திருப்பதால் நடிக்கத் தயார் என்றும் சொன்னார். அவர் கதையை நம்பி நடிக்கும் நாயகி என்பதை அந்த முதல் சந்திப்பிலேயே புரிந்துகொண்டேன்,” என்கிறார் துரை கே.முருகன்.

தொடர்புடைய செய்திகள்

கதைப்படி இனியா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் பூங்கோதை. நாயகனுக்கு இணையான வேடமாம்.

குறிப்பிட்ட ஒரு காட்சியில் பல பேர் முன்னிலையில் அவர் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்க வேண்டும். அந்தக் காட்சியில் வசனங்களே கிடையாது. அப்போது இனியா வெளிப்படுத்திய முக பாவனைகளையும் உடல் மொழியையும் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் கண்கலங்கியதாம்.

“இனியாவைப் போன்ற நடிகைகள் இருக்கும்வரை தரமான படைப்புகளுக்குப் பஞ்சமே இருக்காது. சோனியா அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அனுபவம் வாய்ந்த நடிகை என்ற வகையில் அவர் எனக்கும்கூட சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவை எனக்குக் கைகொடுத்தன,” என்று சொல்லும் துரை கே.முருகன், படத்தின் தயாரிப்பாளரே கதாநாயகனாக மாறிய கதையையும் அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார்.

தனது சொந்த ஊரில் சாதி வன்மம் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து கதையை உருவாக்கி உள்ளார். ஒருமுறை தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக்கிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

“அப்போதுதான் அவரும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அவர் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை விவரித்தபோதுதான், நான் தவறான புரிதலுடன் இருப்பதும் தெரிந்தது.

“முதலில் ஒரு தயாரிப்பாளராகத்தான் இப்படத்தை தயாரிக்க முன் வந்தார் ஜேம்ஸ் கார்த்தி. பிறகு கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தயாரிப்பாளரே பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதனால் அவர்தான் நாயகன் என்று முடிவு செய்துவிட்டேன்.

“தமிழகத்தின் வட மாவட்டங்களைப் பற்றி பேசக்கூடிய திரைப்படங்கள் மிகவும் குறைவு. அங்குள்ள மக்கள் குறித்து இப்படத்தில் பேசியுள்ளேன். அந்த வகையில் இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை,” என்கிறார் இயக்குநர் துரை கே.முருகன்.

குறிப்புச் சொற்கள்