தீபிகா: உயரங்களைத் தொட ஆசைப்பட்டேன்

தீபிகா: உயரங்களைத் தொட ஆசைப்பட்டேன்

3 mins read
c00d20d7-cd02-4a59-b41d-bf1db6bbbc05
தீபிகா. - படம்: ஊடகம்

வாழ்க்கையில் உயரமான இடத்தை அடைய வேண்டும் என்பதே தனது சிறு வயது லட்சியம் என்றும் அதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்கிறார் தீபிகா படுகோன்.

இந்தித் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இவருக்குத்தான் முதலிடம். ஒரு படத்தில் நடிக்க குறைந்தபட்சம் பத்து முதல் 15 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

தற்போது நடிகர் ஹிர்த்திக் ரோஷனுடன் ‘ஃபைட்டர்’, நடிகர் பிரபாஸுடன் ‘கல்கி 2898-ஏடி’ ஆகிய இரு படங்களில் ஒருசேர நடித்து வருகிறார் தீபிகா. இவை இரண்டுமே பெரும் செலவில் உருவாகும் படங்கள். அடுத்த ஆண்டு மே மாதம் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

அதிக ஊதியம், பல்வேறு தொழில்களில் முதலீடு, சொத்துகள் வாங்குவது என திட்டமிட்டுச் செயல்படும் தீபிகாவை வடஇந்திய ஊடகங்கள் நல்ல அறிவாளி எனப் புகழ்கின்றன.

இந்த ஆண்டு தீபிகாவின் சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல துளிர் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள இவர், மனநலப் பிரச்சினைகளைக் கையாளும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை ஆகிய மூன்று அம்சங்கள்தான் தன்னை வாழ்க்கையில் இன்றுள்ள உயரத்தை எட்டிப்பிடிக்க முக்கியமான காரணங்கள் என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தீபிகா.

“சிறு வயதில் பேட்மிண்டன் ஆடிய நாள்களை மறக்கவே இயலாது. தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்சியும் பேட்மிண்டன் பயிற்சியும் முடித்து விட்டுத்தான் பள்ளிக்குச் செல்வேன்.

“மாலை மீண்டும் பயிற்சிக்குப் போவேன். பள்ளியில் அளித்த வீட்டுப் பாடங்களை இரவு முடிக்க வேண்டியிருக்கும். அந்தக் கட்டுப்பாடான வாழ்க்கைதான் எது சரி, எது தவறு என்பதைக் கற்றுத் தந்தது.

“இப்போதும்கூட என்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாகவே உணர்கிறேன். சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத்தான் இன்றளவும் எனது முன்மாதிரியாகக் கருதுகிறேன். என்னுடைய விளையாட்டு பின்புலத்திலிருந்தே எனக்கான ஒழுக்கம் வந்தது,” என்று தீபிகா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு உலகின் மிக செல்வாக்குமிக்க நூறு பேரை பட்டியலிட்டது அமெரிக்காவின் ‘டைம்’ இதழ். அந்தப் பட்டியலில் தீபிகாவும் இடம்பிடித்தார். மேலும், கடந்த ஆண்டு அதே ஊடகம் முதன்முறையாக வழங்கிய ‘இம்பாக்ட்’ விருதையும் அவர் பெற்றார்.

“இதன் மூலம் அனைத்துலக கவனத்தை அவர் ஈர்த்து வருகிறார் என்பது தெளிவாகிறது. விளம்பரப் படங்களில் நடிப்பது, பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராகச் செயல்படுவது என பல்வேறு வகையிலும் சம்பாதித்து வருகிறார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ரூ.10 கோடியை வருமான வரியாகச் செலுத்தியுள்ளார் என்பதில் இருந்தே தீபிகாவின் வருமானம் எவ்வளவு என்பதை ஓரளவு யூகிக்க இயலும்,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.

தீபிகாவின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பதான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றுள்ளது. அண்மையில் மீண்டும் ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த ‘ஜவான்’ படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கண்ட படங்களின் பட்டியலில் விரைவில் இடம்பெற உள்ளது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘நாட்டு நாட்டு...’ பாடலை அறிமுகம் செய்ததும் தீபிகாதான். மேலும் கான் திரைப்பட விழாவில் நடுவர் குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

‘ஃபிபா உலகக் கிண்ண’ காற்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு அந்தக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையும் தீபிகாவுக்குக் கிடைத்துள்ளது.

“ஆனால், இருபது ஆண்டுகளுக்குமுன் டென்மார்க் நாட்டில் பிறந்து வளர்ந்த நான், இன்று பெற்றுள்ள இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் மும்பைக்கு வந்தேன்.

“கையில் ஒற்றைப் பெட்டியையும் விளம்பர மாடலாக உருவாக வேண்டும் என்ற கனவையும் சுமந்தபடி வந்த பின்னர் எனது அத்தை வீட்டில் தங்கியிருந்தபடி உழைத்தேன். பேருந்து, ஆட்டோவில்தான் பெரும்பாலும் பயணம் செய்வேன்.

“என் தந்தை பிரகாஷ் படுகோன் உலகின் முதல்தர பேட்மிண்டன் வீரர் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே, இயல்பாகவே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன். எனினும் மாடலிங், திரையுலகில் பணியாற்ற நான் விரும்பியபோது அவர் என்னை தடுக்கவில்லை. ‘எதைச் செய்தாலும் அதில் சிறப்பாக வரவேண்டும்’ என்று ஆசி வழங்கினார். அந்த ஆசிர்வாதம்தான் என்னை இன்றளவும் வழிநடத்துகிறது,” என்று கூறியுள்ளார் தீபிகா படுகோன்.

குறிப்புச் சொற்கள்