சென்னையில் உள்ள திரையரங்கில் லியோ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை காணத் திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ரசிகர்கள், அத்திரையரங்கில் உள்ள இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியதை காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியான
ஐந்து நிமிடங்களில் பத்து லட்சம் பேர் அதை இணையத்தில் கண்டு ரசித்தனர். இது ஒரு சாதனை என்றும் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் இத்தகைய சாதனை புரிந்ததில்லை என விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
2 நிமிடங்கள் 43 விநாடிகள் கொண்ட ‘லியோ’ முன்னோட்டத்தைப் பார்த்த பிறகு அது முழுநீள ‘ஆக்ஷன்’ படமாகத்தான் இருக்கும் என விஜய் ரசிகர்கள் கணித்துள்ளனர்.
பார்த்தி எனும் விஜய், மனைவி திரிஷா, மகளுடன் காஷ்மீரில் வசிக்கிறார். அவரைக் கொல்வதற்கு வில்லன்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகிய இருவரின் தலைமையில் பெருங்கூட்டம் துரத்துகிறது. எதற்காக இவர்கள் துரத்துகிறார்கள், அவர்களுக்கு விஜய் அளிக்கும் பதிலடி என்ன என்பதுதான் ‘லியோ’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, முன்னோட்டத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கெட்ட வார்த்தைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு காட்சியில் விஜய், மனைவி திரிஷாவிடம் பேசும்போது அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற ஒரு வார்த்தை இடம்பெற வேண்டிய அவசியமே இல்லை. பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள விஜய் போன்ற அனுபவ நடிகர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னோட்ட காட்சிகளில் விஜய்யை லியோ, பார்த்தி என இரண்டு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். எனவே அவர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
அதேசமயம், ஒரே கதாபாத்திரத்தில் இரு வெவ்வேறு தோற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
‘இதற்கும் மேல் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அதற்கு லியோ தான் உயிரோடு வரவேண்டும்,” என்று விஜய் பேசுவதாக இடம்பெற்றுள்ள வசனம்தான் ரசிகர்களை இவ்வாறெல்லாம் யோசிக்க வைக்கிறது.
“காவல்துறையைச் சேர்ந்த விஜய், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இது தொடர்பாக நாட்டின் புலனாய்வு முகமைகளுக்கும் அவர் உதவுகிறார்.
“இதையடுத்து, தாம் காவல்துறை அதிகாரி என்பதை மறைத்து, தீவிரவாதிகளைக் களையெடுக்க அவர்களில் ஒருவராக மாறுகிறார் விஜய். அது எதிரிகளுக்குத் தெரியவந்த பின்னர் விஜய்க்கும் அவரது குடும்பத்துக்கும் என்ன ஆகிறது என்ற கோணத்தில் கதை நகரும்,” என்று விஜய் ரசிகர்கள் பல்வேறு கணிப்புகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
முன்னோட்ட காட்சித் தொகுப்பு எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக இருப்பதாக அவர்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும் ‘லியோ’ குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னோட்டத்தில் லோகேஷ் படம் என்பதற்கான முத்திரை இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இப்படத்தில் விஜய் படத்தில் இடம்பெறும் வழக்கமான அரசியல் வசனங்கள் இருக்காதாம்.
அதேசமயம், நாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களை விஜய் சுட்டிக்காட்டிப் பேசும் சில வசனங்கள் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
‘லியோ’ படத்துக்குப் பூசை போட்ட உடனேயே வியாபாரம் சூடுபிடித்துவிட்டது. படத்தின் வசூல் இந்திய அளவில் பேசப்படும் என்கிறார்கள். புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் படக்குழுவினர் நம்புகிறார்களாம்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியீடு காண்கிறது.